சென்னை,
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியின் பெயரை “ஹாஜி கருத்தராவுத்தர் ஹௌதியா” என்று மாற்றிவிட்டதாக ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுதொடர்பாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
இது முற்றிலும் தவறான தகவல். “தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கடந்த 1924-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் அரசுப் பள்ளிக்கு 12 ஏக்கர் நிலத்தை ஹாஜி கருத்தராவுத்தர் தானமாக வழங்கியுள்ளார். இதனைப் பாராட்டி தமிழ்நாடு அரசு பாராட்டு கேடயமும் வழங்கியுள்ளது.
அவரது நினைவாக இப்பள்ளியில் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இரும்பாலான நுழைவு வாயில் இருந்தது. அந்த நுழைவுவாயில் சேதமடைந்ததால் கடந்த 2018-ம் ஆண்டு ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரி நிர்வாகத்தினரால் புதிய நுழைவு வாயில் அமைத்துத் தரப்பட்டது. பள்ளியின் பெயர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி என்றே உள்ளது” என்று பள்ளி தலைமையாசிரியர் விளக்கமளித்துள்ளார்.
நுழைவு வளைவை வைத்து பள்ளியின் பெயர் மாற்றப்பட்டுவிட்டதாக வதந்தி பரப்பி வருகிறார்கள். மதவெறுப்பைப் பரப்பாதீர்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.