மதுரை,
கணவன், மனைவி விவாகரத்து வழக்கில் குடும்ப நல கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் ஆனந்த்வெங்கடேஷ், ராமகிருஷ்ணன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
திருமண வாழ்வில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் சகிப்புத்தன்மை இன்மையும், திருமண உறவு முறிவு போன்றவை அதிகரிக்கிறது. தனிக்குடும்பம் என்ற கருத்தாக்கம் சிதைந்து வருவது திருமண வாழ்க்கை சீராக செல்வதற்கு பெரும் தடை ஏற்பட்டு உள்ளது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அன்றாட வாழ்வில் மனஅழுத்தம் வெளிப்படுகிறது.
திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவிக்கு இடையே பகிரப்படும் அன்பு, உணர்வுப்பூர்வமான நெருக்கம் மற்றும் அந்தரங்கமான உறவு ஆகியவை மனித உணர்ச்சிகளின் இயல்பான வெளிப்பாடுகளாகும். இவை வாழ்க்கையில் ஆழ்ந்த மன அமைதியையும், புத்துணர்வையும் அளிக்கின்றன. இத்தகைய தோழமை, உணர்வுப்பூர்வமான விரக்தி அல்லது உளவியல் ரீதியான துன்பத்துடன் போராடுவோரின் உயிர் காக்கும் ஆதரவாக மாறுகிறது.
மனநோய் குறித்த கடுமையான குற்றச்சாட்டுகளுடன் கூடிய திருமண வழக்குகள் அதிகரித்து உள்ளன. இந்த நிலையில் வழக்கு விசாரணையின்போது சம்பந்தப்பட்டவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துவது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் அடையாளத்தை பொதுவெளியில் வெளிப்படுத்துவது சமூகத்திற்கு ஒரு சாபக்கேடாக அமையும். இதை தவிர்க்க வேண்டும்.
இதனால் வழக்கின் தீர்ப்புகள், உத்தரவுகள், மனுக்கள் அல்லது கோர்ட்டு பதிவேடுகளில் வழக்கில் தொடர்புடையவர்களை எக்ஸ் மற்றும் ஒய் என்றோ அல்லது வழக்கின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அடையாளம் மறைக்கப்பட்ட பிற பெயர்களில்தான் விவரிக்கப்பட வேண்டும்.
எனவே திருமண வழக்குகளை விசாரிக்கும் அனைத்து கோர்ட்டுகளும் கடுமையான மனநல கோளாறுகள் மற்றும் மனநோய் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலான வழக்குகளில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பெயர்கள் உள்ளிட்ட அனைத்து அடையாளத்தை மறைத்து வேறுவகையில் குறிப்பிட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.