சென்னை,
ஆளவந்தார் அறக்கட்டளை நிலத்தில் நந்தவன பூங்கா அமைக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட்டு, நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னைக்கு அருகில் கிழக்கு கடற்கரை சாலையையொட்டிய திருவிடந்தை கிராமத்தில் ஆயிரம் காணி ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் நந்தவன பூங்கா என்ற பெயரில், ஆன்மிக, கலாச்சார, சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆளவந்தார் அறக்கட்டளை நோக்கங்களுக்கு எதிராக நந்தவன பூங்கா திட்டத்தை முந்தைய திமுக அரசு அறிவித்து, அடிக்கல் நாட்டியதும், திமுக அரசின் அந்தத் திட்டத்தை அப்படியே தவெக அரசு செயல்படுத்துவதும் கண்டிக்கத்தக்கவை ஆகும்.
செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் வெங்கடபதி நாயகர்-அகிலாண்டம்மாள் இணையருக்கு மகனாக 1835-ம் ஆண்டில் பிறந்த ஆளவந்தார் நாயகர், அவரது கடுமையான உழைப்பால் சேர்த்த 1550 ஏக்கர் நிலங்களை திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோயிலுக்கு இறைபணிக்காக வழங்கினார். அவரது பெயரில் செயல்பட்டு வரும் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமாக இப்போது 1054 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது. இந்த நிலத்தில் புல எண் 194/1ல் 181 ஏக்கர், 350ல் 37 ஏக்கர் என, மொத்தம் 218 ஏக்கர் பரப்பில் இந்து சமய அறநிலையத்துறையும், சுற்றுலாத்துறையும் இணைந்து ஆன்மிக, கலாச்சார, சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க முடிவு செய்தன.
நந்தவனப் பூங்கா என்ற பெயரிலான இந்தத் திட்டம் ரூ.112.13 கோடியில் செயல்படுத்தப்படும்; இத்திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.99.67 கோடி சிறப்பு உதவியாக வழங்குகிறது. நந்தவனப் பூங்கா நடைமுறைக்கு வரும் போது கிடைக்கும் வருவாயில் 60 சதவீத இந்து சமய அறநிலையத்துறைக்கும், 40 சதவீதம் சுற்றுலாத்துறைக்கும் வழங்கப்படும். மொத்தம் 4 கட்டங்களாக செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தின் முதல்கட்டமாக கலச்சாரம் சார்ந்த பொம்மைகள், தாமரை பூங்கா, புல்வெளி, நடைபாதை ஆகியவற்றை ரூ. 22.53 கோடியில் அமைக்கும் பணிகளுக்கு திமுக ஆட்சியில் கடந்த மார்ச் 5-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பின் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், இப்போது நந்தவனப்பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சுற்றுலாப் பயணிகள் வருகையில் முதலிடத்தில் உள்ள தமிழ்நாட்டில் சுற்றுலா மேம்பாட்டுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது. அதன் மூலம் வேலைவாய்ப்புகளும், அரசுக்கு வருவாயும் பெருகும் என்பதால் இத்தகைய திட்டங்கள் அவசியம் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். ஆனால், அத்தகைய திட்டங்கள் அரசுக்கு சொந்தமான நிலங்களில் தான் செயல்படுத்தப்பட வேண்டுமே தவிர, வேறு பயன்பாட்டுக்காக கொடையாக வழங்கப்பட்ட நிலங்களில் செயல்படுத்தப்படக்கூடாது.
நந்தவனப் பூங்கா அமைக்கப்படும் நிலம் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமானது ஆகும். ஆளவந்தார் எழுதி வைத்த நிலங்கள், அவரால் குறிப்பிடப்பட்ட இறைபணிக்கான தேவையை விட பல மடங்கு அதிகம் என்பதால், அவற்றை வேறு பணிகளுக்காக பயன்படுத்தலாமா? என்ற வினா எழுந்த போது, அவற்றைக் கல்விப் பணிக்காக பயன்படுத்தலாம் என்று நீதியரசர் சேஷாத்ரி அய்யர் தலைமையிலான சென்னை ஐகோர்ட் அமர்வு கடந்த 1918-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் நாள் தீர்ப்பளித்தது. ஆனால், கடந்த சில பத்தாண்டுகளாகவே ஆளவந்தார் அறக்கட்டளை நிலங்கள் அறக்கட்டளை நோக்கத்திற்கு எதிரான பணிகளுக்காக தாரை வார்க்கப்படுகின்றன.
2001-06 அதிமுக ஆட்சிக்காலத்தில் பரத முனிவர் பண்பாட்டு மையம் அமைப்பதற்காக ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் தாரைவார்க்கப்பட்டது. அதன்பின் கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களுக்காக மொத்தம் 125 ஏக்கர் நிலங்கள் மிகக்குறைந்த வாடகைக்கு தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு வழங்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து இப்போது மேலும் 218 ஏக்கர் நிலங்களை நந்தவனப் பூங்கா அமைப்பதற்காக சுற்றுலாத்துறைக்கு ஒதுக்கீடு செய்வது ஆளவந்தாருக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும்.
ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை தாரைவார்க்கும் பணிகள் கடந்த திமுக ஆட்சியில் தீவிரப்படுத்தப்பட்டன. பட்டிப்புலம் பகுதியில் புல எண் 168/24, பட்டா எண் 12 இல் உள்ள 60 ஏக்கர் நிலத்தை மாத வாடகை 22.02 லட்சம் என்ற தொகைக்கு தனியார் நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கான ஏலம் கடந்த 20.07.2023 -ம் நாள் நடைபெற இருந்தது. அதன்பின், அதிநவீன திரைப்பட நகரம் அமைப்பதற்காக முதல்கட்டமாக புல எண்கள் 30, 31, 33, 195/2ஏ, 196, 212 ஆகியவற்றில் உள்ள 29.175 ஏக்கர் நிலத்தை நீண்டகால குத்தகைக்கு வழங்கவும், அடுத்தக்கட்டமாக மேலும் 70.825 ஏக்கர் நிலங்களை தாரை வார்க்கவும் அரசு திட்டமிட்டிருந்தது. மூன்றாவதாக ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 50 ஏக்கர், 100 ஏக்கர் பரப்பளவிலான நிலங்களை தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு நீண்ட கால குத்தகைக்கு வழங்கவும் அரசு முடிவு செய்தது. இவை தவிர சவுக்கு பயிரிடப்பட்டிருந்த ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 564 ஏக்கர் நிலத்தை சூரியஒளி மின்திட்டத்தை செயல்படுத்தவும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கவும் திமுக அரசு முடிவு செய்திருந்தது. இந்த முயற்சிகள் அனைத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி முறியடித்தது.
ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்கள் பிற நோக்கங்களுக்காக தாரை வார்க்கப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி தடுத்து நிறுத்திய நிலையில், இப்போது நந்தவனப் பூங்கா அமைக்கும் திட்டத்திற்காக 218 ஏக்கர் நிலங்கள் அபகரிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்கள் இறைபணி தவிர, கல்வி பணிகளுக்காக மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராகவே இந்தத் திட்டம் அமையும். அதனால், இதை அரசு கைவிட வேண்டும்.
ஆளவந்தாரின் வம்சத்தைச் சேர்ந்த வன்னிய குல மக்கள் இன்னும் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிக மிக பின்தங்கிய நிலையில் தான் உள்ளனர். இறைபணிக்கு பயன்படுத்தப்பட்டது போக மீதமுள்ள ஆளவந்தார் நாயகரின் சொத்துகளை வன்னிய மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக பயன்படுத்துவது தான் மிகவும் பொருத்தமாக இருக்கும். அதை விடுத்து ஆளவந்தாரின் சொத்துகளை பிற பணிகளுக்கு அரசு தாரை வார்ப்பதை வன்னிய மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே, திருவிடந்தை பகுதியில் நடைபெற்று வரும் நந்தவனப் பூங்கா அமைக்கும் பணிகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். தேவைப்பட்டால், பிற பகுதிகளில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களில் ஆன்மிக, கலாச்சார, சுற்றுச்சூழல் பூங்காவை அமைக்கலாம்.
ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்கள் அதன் நோக்கங்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அவற்றை நிர்வகிக்கும் அதிகாரத்தை இந்து சமய அறநிலையத்துறையிடமிருந்து பறித்து, தன்னாட்சி அதிகாரம் பெற்ற நிர்வாகக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்காக பி.டி.லீ செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளைக்கு அமைக்கப்பட்டிருப்பது போன்ற அறங்காவலர் குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.