தமிழக செய்திகள்

நாராயணபுரம், வேளச்சேரி ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணி: அமைச்சர் என். ஆனந்த் ஆய்வு

நாராயணபுரம் ஏரியானது பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு மத்திய பகுதியில் அமைந்துள்ள கடைகோடி ஏரியாகும்.

சென்னை,

நாராயணபுரம், வேளச்சேரி ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணியை அமைச்சர் என். ஆனந்த் ஆய்வு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்து களப்பணியை ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவுப்படி இன்று காலை 9.00 மணியளவில் சென்னை மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், பள்ளிக்கரணை நாராயணபுரம் கிராமம், பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியினை தூர்வாரி சீரமைக்கும் பணி தொடங்கி வைத்து கள ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு, காலை 11.00 மணியளவில் சென்னை மாவட்டம், வேளச்சேரி வட்டம், வேளச்சேரி கிராமம், வேளச்சேரி ஏரியினை தூர்வாரி சீரமைக்கும் பணியை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் கள ஆய்வு செய்து தொடங்கி வைத்தார்கள்.

நாராயணபுரம் ஏரியினை தூர்வாரி சீரமைக்கும் பணி

பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் – 14, வார்டு எண் 186 எல்லைக்குட்பட்ட பள்ளிக்கரணை நாராயணபுரத்தில் அமைந்துள்ள நாராயணபுரம் ஏரியின் பெரும்பாலான பகுதிகள் நகரமயமாதலின் விளைவாக குடியிருப்பு பகுதிகளாக மாற்றமடைந்துள்ளதால், தற்போது இந்த ஏரியானது நிலத்தடிநீர் மட்டம் குறையாமல் இருக்கவும், சுற்று சூழல் பாதுகாக்கவும் பயன்பட்டு வருகிறது. நாராயணபுரம் ஏரியானது பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு மத்திய பகுதியில் அமைந்துள்ள கடைகோடி ஏரியாகும். ஆகையால், இந்த ஏரிக்கு மேற்புறத்தில் அமைந்துள்ள தென் சென்னை பகுதிக்குட்பட்ட பள்ளிக்கரணை அணை ஏரி, கீழ்க்கட்டளை ஏரி, பல்லாவரம் ஏரி ஆகிய ஏரிகளின் உபரிநீரானது நாராயணபுரம் ஏரியில் வடிந்து, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு சென்றடையும் வகையில் அமைந்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லைக்குள் அமைந்துள்ள இந்த ஏரியில் ஆகாயத்தாமரைகள், மிதவைத் தாவரங்கள் மற்றும் மிதவைப் பொருட்கள் படர்ந்து நீரோட்டத்தை பாதிக்கும் வகையில் உள்ளது.

நீர்வளத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து தூர்வாரும் பணியை மேற்கொள்ளப்படுவதால் சென்னை பெருநகராட்சிக்குட்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தினை சுற்றியுள்ள பகுதிகள் வெள்ள பாதிப்புகள் குறைக்கப்படும்.

வேளச்சேரி ஏரியினை தூர்வாரி சீரமைக்கும் பணி

வேளச்சேரி ஏரியானது பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் – 13, வார்டு எண் 175 உட்பட்ட, சென்னை மாவட்டம், வேளச்சேரி வட்டம், வேளச்சேரி கிராம புல எண்: 123/1 பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் ஆயக்கட்டு பகுதிகள் அனைத்தும் நகரமயமாதலின் விளைவாக பல வருடங்களுக்கு முன்னரே அடர்ந்த குடியிருப்பு பகுதிகளாக மாற்றம் அடைந்துவிட்டதால், விவசாய பணிகள் ஏதுமின்றி இந்த ஏரி தற்போது நிலத்தடிநீர் மட்டம் குறையாமல் இருக்கவும், சுற்று சூழல் பாதுகாக்கவும் பயன்பட்டு வருகிறது.

தற்போது இந்த ஏரியில் 22.40.0 ஹெக்டேரில் மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. இவ்விதமாய் தேக்கி வைக்கப்படும் நீர் சுற்றுப்பகுதிகளுக்கு நிலத்தடிநீரை மேம்படுத்தும் ஆதாரமாக உள்ளது. இந்நிலையில் இந்த ஏரியில் ஆகாயதாமரை படர்ந்துள்ளதால் ஏரியின் கொள்ளளவு மற்றும் நீர் கடத்தும் திறன் குறைந்த நிலையில் உள்ளது.

இவற்றை முறையாக தூர்வாரி பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். எனவே, தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவுப்படி, நீர்வளத்துறை அமைச்சர் வழிகாட்டுதலின் பேரில் பெருநிறுவனப் பங்களிப்பு மற்றும் தன்னார்வலர்களின் பங்கேற்புடன், வேளச்சேரி பகுதியில் அமைந்துள்ள, வேளச்சேரி ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை, மிதக்கும் பொருட்கள் மற்றும் கழிவுகள் ஆகியவற்றை அகற்றி மழைக்காலங்களில் மழை நீர் தங்கு தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படவுள்ளது.

பருவ மழை காலத்திற்கு முன்னர் வெள்ள முன்னெச்சரிக்கை பணியாக, திட்டமிடப்பட்டு முடிக்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவுப்படி, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் தூர்வாரும் பணியை கொடியசைத்து தொடங்கி வைத்து, கள ஆய்வு மேற்கொண்டு விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

பங்கேற்பு

இந்நிகழ்வில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறை அமைச்சரும் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினருமான குமார், சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.சரவணன், நீர்வளத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் சத்யபிரத சாகு, தெற்கு வட்டார துணை ஆணையாளர் அஃப்தாப் ரசூல், நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது), கோபாலகிருஷ்ணன், சென்னை மண்டல தலைமை பொறியளார் ஜானகி, பாலாறு வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளர் மாரியப்பன்,காஞ்சிபுரம் கீழ் பாலாறு வடிநில கோட்ட செயற்பொறியளார் விஜயகுமார், செங்கல்பட்டு கீழ் பாலாறு வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியளார் பாஸ்கரன், உதவி பொறியளார்கள் பிரஸ்னேவ் பிரபு, குஜராஜ், சாய்சரன், சேதுராணி மற்றும் பெருநிறுவனங்களின் பிரதிநிதிகள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு பணி துவக்க விழாவை சிறப்பித்தனர்.