தமிழக செய்திகள்

4399 நாட்கள் நரேந்திர மோடி பிரதமராக இருப்பது பாராட்ட வேண்டிய சாதனை - ப.சிதம்பரம்

ஜனநாயகத்தைப் பாலூட்டி வளர்த்த பெருமை ஜவஹர்லால் நேருவை சார்ந்தது என்பதை நினைவு கொள்வோம் என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

சென்னை,

கடந்த 2014 மற்றும் 2019 தேர்தல்களை தொடர்ந்து 2024 நாடாளுமன்ற தேர்த லிலும் வெற்றி பெற்று, அந்த ஆண்டு ஜூன் 9-ந் தேதி நரேந்திர மோடி தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றார். அவருடைய தலை மையிலான மத்திய அரசு. தனது 3-வது பதவிக்காலத்தின் 2 ஆண்டுகளை ஜுன் 8-ம் தேதியுடன் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

நீண்ட கால பிரதமர்

இந்தியாவில் மிக நீண்டகாலம் பிரதமராக இருந்தவர் நேருதான். இவர் 1947-ம் ஆண்டு முதல் 1964-ம் ஆண்டு வரை ஏறக்குறைய 17 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். பிரதமர் பதவியில் அவரது மொத்த நாட்களின் எண்ணிக்கை 6,310 ஆகும்.

ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரு பிரதமராக அவரது தொடர்ச்சியான பதவிக்காலம் 4,398 நாட்கள்தான். இதைப்போல நேருவுக்கு அடுத்து மிக நீண்டகாலம் பதவி வகித்தவர் பிரதமர் இந்திராகாந்தி. அவரது மொத்த பதவி நாட்களின் எண்ணிக்கை 5,835. ஆனால் தொடர்ச்சியாக 4077 நாட்கள் பதவி வகித்து உள்ளார்.

பிரதமர் மோடி

இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடி, தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரு பிரதமராக 2014-ம் ஆண்டு முதல் நேற்றோடு 4,399 நாட்களை நிறைவு செய்துள்ளார். இதன்மூலம் நேருவின் சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது. இந்த சாதனைக்காக பிரதமர் மோடியை பாராட்டி மத்திய மந்திரிசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தநிலையில், காரைக்குடியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

மோடி பிரதமராக 4399 நாட்கள் இருப்பது பாராட்ட வேண்டிய சாதனை. வாழ்த்துக்கள். ஆனால் நேரு 4398 நாட்களுடன் சேர்த்து கூடுதலாக 5 ஆண்டுகள் பிரதமராக இருந்ததை மறந்து விடக்கூடாது. ஜவஹர்லால் நேருவின் சாதனையை முறியடித்தது என்று சொல்வது பிழை.

நேரு

1947 முதல் 1952 வரை நேரு பிரதமராக இருந்தார் என்பதை மறக்க முடியுமா? நீக்க முடியுமா?

பிரதமர் மோடியின் 12-ஆண்டு சாதனையை பாராட்டுவோம். அதேநேரத்தில் பாரத ரத்னா நேருவின் 17-ஆண்டு சாதனையைப் போற்றுவோம்.

1947 முதல் 1952 வரை பிஞ்சுக் குழந்தைப் பருவத்தில் இருந்த ஜனநாயகத்தைப் பாலூட்டி வளர்த்த பெருமை ஜவஹர்லால் நேருவை சார்ந்தது என்பதை நினைவு கொள்வோம் என்றார்.