வாஷிங்டன்,
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் பணியில், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக நிலவில், சூரிய வெளிச்சம் படாத தெற்கு பகுதிகளில் தண்ணீர் திட்டுகள் உறைந்த நிலையில் கண்டுபிடிக்கப்படலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். எனவே, நிலவின் தென் துருவத்திற்கு எதிர்காலத்தில் மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்யவும் நாசா திட்டமிட்டு வருகிறது.
இதனிடையே, விண்வெளி வீரர்கள் நிலவுக்கு செல்லும்போது, அவர்களின் விண்வெளி உடையில் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினை குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பு தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது. நிலவில் வளிமண்டலம் கிடையாது என்பதால், விண்வெளி வீரர்கள் பிரத்யேக விண்வெளி உடையை அணிந்துதான் நிலவில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள முடியும்.
அவ்வாறு விண்வெளி வீரர்கள் நிலவின் மேற்பரப்பில் நடக்கும்போது, அவர்களின் விண்வெளி உடை நிலவின் மேற்பரப்பில் இருக்கும் மணல் துகள்கள் மற்றும் சுற்றியுள்ள பிளாஸ்மா பொருட்களுடன் உராய்வதால், அந்த உடையில் நிலையான மின்னூட்டம்(Static Charges) சேரக்கூடும்.
நிலவின் தென் துருவத்திற்கு அருகே, சூரிய வெளிச்சம் இல்லாத நிரந்தரமாக நிழல் படிந்த பகுதிகளுக்குள் விண்வெளி வீரர்கள் நுழையும்போது இந்த நிலை மின்னூட்டம் மேலும் அதிகமாகும். இதனால் விண்வெளி வீரர்கள் தங்கள் விண்கலத்திற்குத் திரும்பும்போது, அவர்களின் உடைககளில் சேர்ந்திருக்கும் மின்னூட்டம் காரணமாக தீப்பொறி உருவாகக் கூடும். இது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம்.
எனவே, விண்வெளி வீரர்கள் தங்கள் விண்கலத்தை நெருங்குவதற்கு அல்லது தொடுவதற்கு முன்பு, அவர்களின் உடையில் இருக்கும் மின்னூட்டத்தைப் பாதுகாப்பாக நியூட்ரல்(Neutral) செய்யக்கூடிய தொழில்நுட்பத்தை உருவாக்க நாசா முயன்று வருகிறது. இது தொடர்பான அறிவிப்பை நாசா தற்போது வெளியிட்டுள்ளது.
இதன்படி, விண்வெளி வீரர்களின் உடையில் ஏற்படக்கூடிய நிலை மின்னூட்டப் பிரச்சினைக்கு தீர்வு காண்பவர்களுக்கு 1,50,000 டாலர்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.39 கோடி) பரிசு வழங்கப்படும் என நாசா அறிவித்துள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் இருப்பவர்கள் தங்களது கண்டுபிடிப்பின் மாதிரி வடிவங்களையும், அதன் செயல்பாட்டு விளக்கத்தையும் நாசாவின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இந்த போட்டியில் கலந்து கொள்ள கட்டணம் எதுவும் கிடையாது. இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்படும் மாதிரி வடிவங்கள் குறித்து சம்பந்தப்பட்ட போட்டியாளர்களுக்கு நாசாவில் இருந்து கடிதம் அனுப்பப்படும். 2027 ஜனவரி 15-ந்தேதிக்குள் மாதிரி வடிவங்களை சமர்ப்பிக்க வேண்டும் என நாசா தெரிவித்துள்ளது.