தமிழக செய்திகள்

கிராமப்புற மாணவர்களின் கல்விச் சேவைக்கு தேசிய விருது - ஆசிரியர் தங்கராஜுக்கு நயினார் நாகேந்திரன் பாராட்டு

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கரங்களால் விருது பெறவிருப்பது, தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்க்கும் நிகழ்வாகும்.

தென்காசி,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

தேசிய நல்லாசிரியர் விருது

தமிழகத்தின் தென்காசி மாவட்டம் புளியம்பட்டி ஆரம்பப் பள்ளி ஆசிரியர் தங்கராஜ் , மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது, தமிழ்நாட்டின் கல்விப் பெருமைக்கு கிடைத்துள்ள மாபெரும் அங்கீகாரம்! வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி, டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான ஆசிரியர் தினத்தன்று, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களின் கரங்களால் விருது பெறவிருப்பது, தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்க்கும் நிகழ்வு!

மனமார்ந்த பாராட்டு

கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி, ஆசிரியர் பணியின் மகத்துவத்தை நாடறியச் செய்துள்ள தங்கராஜ் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

தேசிய அளவில் தமிழகத்தின் கல்வித் தொண்டை அங்கீகரித்து, நல்லாசிரியர்களை கௌரவிக்கும் மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், மத்திய கல்வி மந்திரி பிரகலாத் ஜோஷி அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.