தமிழக செய்திகள்

தேசிய கூடைப்பந்து போட்டி: தமிழக அணிகளுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து

விளையாட்டு வீரர்கள் அனைவரும் உயர் கல்வியை கண்டிப்பாக நிறைவுசெய்தால்தான், விளையாட்டுத் துறை பணி ஒதுக்கீட்டின் போது உயர் அலுவலர்கள் நிலையிலான பணியினை தேர்வு செய்ய முடியும்.

சென்னை,

அகில இந்திய அளவிலான 18 வயதுக்குட்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டிகள் புதுச்சேரியில் வரும் 22.05.2026 முதல் 29.05.2026 வரை நடைபெறவுள்ளதையொட்டி, பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்களை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில், இன்று தமிழ்நாடு ஜூனியர் கூடைப்பந்து ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு விளையாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது.

தமிழ்நாடு முதலமைச்சர் இளைய தலைமுறையினரின் முன்னேற்றத்தில் தனி கவனம் செலுத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக விளையாட்டில் ஆர்வமுள்ள வீரர், வீராங்கனைகளை கண்டறிந்து விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் மூலம் அவர்களை சாதனையாளர்களாக மாற்றிட தொலைநோக்கு செயல்திட்டங்களை வகுத்து வருகிறார்கள்.

விளையாட்டு விடுதி மாணவனாக உங்களை போன்று நானும் ஒரு கூடைப்பந்து வீரராக இருந்து படிப்படியாக கடின உழைப்பால் முன்னேறி இன்றைய தினம் உங்கள் முன் விளையாட்டுத் துறை அமைச்சராக வந்துள்ளேன். உங்களையெல்லாம் பார்க்கும்போது, எனது கூடைப்பந்து பயிற்சி நாட்கள் பசுமையான நினைவிற்கு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உங்களை போன்ற இளைஞர்களுக்கு உரிய வழிக்காட்டுதல்களை வழங்கி சாதனையாளர்களாக திகழச் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.அந்த வகையில் விளையாட்டு வீரர்களாகிய உங்கள் தேவைகள் அனைத்தையும் செய்துத்தர தயாராக உள்ளேன்.

பொதுவாக சாதனைகள் புரிய விடாமுயற்சியும், கடின உழைப்பும் மிக முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக விளையாட்டு பயிற்சி நேரங்கள் முடிந்து சிறிதுநேர ஓய்விற்கு பின் உடனடியாக படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டு வீரர்கள் அனைவரும் உயர் கல்வியை கண்டிப்பாக நிறைவுசெய்தால்தான், விளையாட்டுத் துறை பணி ஒதுக்கீட்டின் போது உயர் அலுவலர்கள் நிலையிலான பணியினை தேர்வு செய்ய முடியும்.

பொதுவாக விளையாட்டு வீரர்கள் என்றாலே தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக அறியப்படுவார்கள். அந்த வகையில் தற்பொழுது பங்கேற்கவுள்ள போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று நம் தமிழ்நாட்டிற்கும் பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோருக்கு பெருமை சேர்க்க வேண்டுமென இத்தருணத்தில் வாழ்த்துகிறேன். கண்டிப்பாக நீங்கள் பங்கேற்கும் போட்டிகளை நேரில் பார்க்கவும் திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.