கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் - மத்திய மந்திரி எல்.முருகன் பேட்டி

திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப மக்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர் என்று மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

கோவை,

கோவை விமான நிலையத்தில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகமே எதிர்பார்க்கும் வெற்றியை தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) பெறப்போகிறது. திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப மக்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர். ஏப்ரல் 23-ம் தேதி விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு அதனை உறுதிப்படுத்தியுள்ளது. திமுக அரசின் மீது மக்கள் கொண்டுள்ள கோபம், ஆதங்கம் மற்றும் வெறுப்பு ஆகியவை மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகளில் வெளிப்படும்.

தமிழகத்தில் 'டபுள் என்ஜின்' சர்க்கார் அமைவது மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உத்வேகத்தைக் கொடுக்கும். கருத்துக்கணிப்புகள் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை ஏற்கனவே கணித்துள்ளது.

முன்னதாக மராட்டியம் மற்றும் அரியானா தேர்தல்களில் பாஜக வெற்றி பெறாது என்று கூறப்பட்ட போதிலும், இறுதியில் பாஜகவே வெற்றி பெற்றது. இன்னும் இரு தினங்களில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்துத் துறை ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், 'ஊழல்வாதிகள் எந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார்கள் என்பதை இது காட்டுவதாகவும், சட்டம் தன் கடமையைச் செய்யும்' என்றும் தெரிவித்தார். மேலும், அண்ணாமலைக்கு ராஜ்யசபா பதவி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, 'நிச்சயம் கொடுப்பார்கள்' என்று நம்பிக்கையுடன் பதிலளித்தார்.

SCROLL FOR NEXT