துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 
தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் இருந்து தேசியம் ஒருபோதும் மறையாது - துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு

நான் படித்த இந்த வ.உ.சி கல்லூரிக்கு மீண்டும் வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தூத்துக்குடி,

தமிழ்நாட்டில் இருந்து தேசியம் ஒருபோதும் மறையாது என்றும், தேசியம் தான் தமிழையும், தமிழ்நாட்டின் பெருமையையும் காக்கும் என்றும் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கல்லூரி பவள விழா

தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் கல்லூரியின் பவள விழா மற்றும் முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த கல்லூரியின் முன்னாள் மாணவரான துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மலரும் நினைவுகள்

கல்லூரி வளாகத்திற்கு வந்த அவர், தான் பயின்ற பழைய வகுப்பறைக்கு நேரில் சென்றார். அங்கு தனது மாணவ பருவத்து நண்பர்களை சந்தித்து, பழைய மலரும் நினைவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டார்.

பின்னர், கல்லூரியின் பவள விழா மேடையில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

“நான் படித்த இந்த வ.உ.சி கல்லூரிக்கு மீண்டும் வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. "நிறைய பேர் நினைப்பது போல தமிழ்நாட்டில் தேசியம் மலிந்துவிட்டதா என்று கேட்டால், அது நிச்சயம் இல்லை. இன்றைக்கு மட்டுமல்ல, சுதந்திரப் போராட்ட காலத்தில் மகத்தான தியாகிகள் சுப்பிரமணிய சிவாவாக இருக்கலாம், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாராக இருக்கலாம், வீரபாண்டிய கட்டபொம்மனாக இருக்கலாம், பெருந்தலைவர் காமராஜராக இருக்கலாம் இப்படி எண்ணற்ற தேசபக்தர்களை உருவாக்கிய மண் இந்த தமிழ் மண்.

தமிழ்நாட்டில் இருந்து தேசியம் ஒருபோதும் மறையாது. தேசியம் தான் தமிழை காக்கும், தமிழ்நாட்டின் பெருமையையும் காக்கும்.”

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான முன்னாள், இந்நாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT