தமிழக செய்திகள்

நேபாளத்தில் இயற்கை பேரிடர்: இந்தியா அனைத்து உதவிகளையும் வழங்க தயார் - எச்.ராஜா

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சிகளை பார்க்கும் போது அதிர்ச்சியிலும், அச்சத்திலும் நெஞ்சம் பதைபதைக்கிறது.

சென்னை,

இந்திய அரசு நேபாளத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

இயற்கை பேரிடர்

நேபாளத்தில் பனிமலை உருகி அந்நாட்டின் கண்டகி, திரிசூலி, கோஷி உள்ளிட்ட அனைத்து ஜீவநதிகளிலும் வரலாறு காணாத பெருவெள்ளம் வந்து மிகப்பெரிய இயற்கை பேரிடர் உருவாகி அது நேபாளம் முழுவதும் ஏற்படுத்தியுள்ள பேரழிவு உலகெங்கும் வாழும் அனைவருக்கும் வேதனையையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

வீடுகள், வர்த்தக கட்டிடங்கள், மிகப்பெரிய மேம்பாலங்கள், பிரதான சாலைகள், வாகனங்கள் அனைத்தும் பெருத்த சேதமடைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சிகளை பார்க்கும் போது அதிர்ச்சியிலும், அச்சத்திலும் நெஞ்சம் பதைபதைக்கிறது. இந்த பெரு வெள்ளத்தில் சிக்கி பலர் இறந்துள்ளனர்.

மேலும் இந்த பெரு வெள்ளத்தில் நேபாள மக்களும், அந்நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்த இந்நிய மக்களில் பலரும் காணாமல் போயுள்ளனர். தமிழகத்தில் இருந்து நேபாளத்திற்கு 57 பேர் சென்றுள்ளனர். அனைவரும் பத்திரமாக மீட்கப்பட எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியட்டும்.

உதவிகள்

இந்திய அரசு நேபாளத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கை பேரிடரைத் தொடர்ந்து உலக நாடுகள் தங்கள் கவலையையும், ஆதரவையும் தெரிவித்துள்ளன. நேபாளில் ஏற்பட்டுள்ள இந்த பெருவெள்ளம் எல்லையோர இந்திய மாநிலமான பீகாரையும் தாக்கக் கூடும் என்ற எச்சரிக்கை வந்திருப்பதால் மத்திய அரசு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நெருக்கடியான நேரங்களில் நாடு, மொழி, எல்லைகளை கடந்து இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள நேபாள மக்கள் இந்த பேரழிவில் இருந்து விரைவில் மீண்டு வர பிரார்த்திப்போம். மேலும் நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை அனைவரும் பிரார்த்திப்போம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.