சென்னை,
2026-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 'தமிழ் வம்சாவளி' நவநீதம் பிள்ளைக்கு வழங்கப்படுவதாக நார்வே நோபல் குழு அறிவித்துள்ளது. அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகளுக்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வாகியுள்ள தென்னாப்பிரிக்கத் தமிழர் நவநீதம் பிள்ளைக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
2026-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக நோபல் அறக்கட்டளை அறிவித்திருக்கிறது. உலகம் முழுவதும் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கும் நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது மிகவும் பொருத்தமானது. நவநீதம் பிள்ளைக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்துவதில் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக இப்பரிசு அவருக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவராக பணியாற்றியபோது, இலங்கை போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக நவநீதம் பிள்ளை மேற்கொண்ட முயற்சிகளை நான் அறிவேன்.
இந்த விஷயத்தில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். அமைதிக்கான நவநீதம் பிள்ளையின் பணிகள் தொடர எனது வாழ்த்துகள்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.