தமிழக செய்திகள்

அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நவநீதம் பிள்ளைக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

துணிச்சலும் கொள்கை உறுதியும் நிறைந்தது அவரது பயணம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

2026-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 'தமிழ் வம்சாவளி' நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகளுக்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நவநீதம் பிள்ளைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

2026-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள நவநீதம் பிள்ளைக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், குரலற்றவர்களின் உரிமைகளுக்காகவும் தமது வாழ்நாளையே அர்ப்பணித்த அவரது நெடிய பயணத்திற்குக் கிடைத்துள்ள அங்கீகாரம் இது!

2012-ம் ஆண்டு ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையில் அவரைச் சந்தித்து, ஈழத்தமிழர்களின் துயர்மிகுந்த வாழ்வையும், நீதிக்காகவும் கண்ணியமான வாழ்வுக்காகவும் அவர்கள் நடத்திவரும் போராட்டத்தையும் எடுத்துரைத்ததை இத்தருணத்தில் நெகிழ்வுடன் நினைவுகூர்கிறேன்.

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் தொடங்கி, உலகெங்கிலும் மனித உரிமைகளுக்காகக் குரல்கொடுப்பது வரை, துணிச்சலும் கொள்கை உறுதியும் நிறைந்தது அவரது பயணம்! மனித உரிமைகளுக்காகவும் நீதிக்காகவும் அவர் ஆற்றிவரும் பணி, வருங்காலத் தலைமுறைகளுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT