தமிழக செய்திகள்

பிரதமர் மோடி மீது தனிப்பட்ட தாக்குதல்களை தொடுக்கும் காங்கிரஸ் - நயினார் நாகேந்திரன் கண்டனம்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தொடர் தோல்விகளை தாங்கிக் கொள்ள முடியாமல், பிரதமர் மோடி மீது தனிப்பட்ட தாக்குதல்களை தொடுக்கும் காங்குரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

மன்னிப்பு கேட்க வேண்டும்

இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

நேற்றைய தினம் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், நமது பாரதப் பிரதமர் நரேந்திரன் மோடியின் மறைந்த தந்தை குறித்து தரக்குறைவான கருத்துக்களை வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடனடியாக பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் .

நாடு முழுவதிலும் நடக்கும் அனைத்து தேர்தல்களிலும் மக்களால் அடித்து விரட்டப்படும் காங்கிரஸ் கட்சி, தனது ஆதங்கத்தையும், ஆத்திரத்தையும் எங்கள் தலைவர்கள் மீதான தனிப்பட்ட தாக்குதல்களாக தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருப்பது அநாகரிக அரசியலின் உச்சம். அதிலும் காங்கிரஸ் கட்சியிலேயே வயதில் மிகவும் மூத்தவரான மல்லிகார்ஜுன் கார்கே, நாட்டு பிரதமரின் குடும்பத்தார் மீது இப்படியான தரம் தாழ்ந்த விமர்சனங்களை வைப்பது அக்கட்சியின் வளர்ப்பைத் தான் காட்டுகிறது.

நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை

மக்களின் பேராதரவுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் அரியணையில் அமர்ந்திருக்கும் நரேந்திர மோடியை, தேநீர் விற்றவர் என்றார்கள், குடும்பம் இல்லாதவர் என்றார்கள், தாயை பழித்தார்கள் இன்று அவரது தந்தையையும் இகழ்கிறார்கள். ஒட்டுமொத்த தேசமும் "மோடியின் குடும்பம்" என்பதை காங்கிரஸ் மறந்துவிட்டது போல. இந்த கீழ்த்தரமான அரசியலுக்காகத் தான் மக்கள் காங்கிரஸை வெறுக்கிறார்கள் என்பது இன்னும் கூட புரியவில்லை போல.

எனவே, நமது பாரதப் பிரதமர் குறித்து நாவடக்கம் இன்றி பேசிய மல்லிகார்ஜுன் கார்கே உடனடியாக பொது மன்னிப்பு கோர வேண்டும் என்பதை மீண்டுமொரு முறை வலியுறுத்துகிறேன். இல்லையேல் தமிழக பாஜக சார்பாக மாநிலம் முழுவதிலும் பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பதை எச்சரிக்கையாகவே விடுக்கிறேன்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT