தமிழக செய்திகள்

சசிகலா கட்சி வேட்பாளரால் நயினார் நாகேந்திரன் வெற்றி பறிபோனது

முதுகுளத்தூர் தொகுதியில் சசிகலா கட்சி சார்பில் களம் இறக்கப்பட்ட ராம்குமார் பாண்டியன் 40,422 வாக்குகளை பெற்றார்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவினாலும், பா.ம.க.வில் ராமதாஸ் அணி, சசிகலாவின் அகில இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை கூட்டணி அமைத்து 120 தொகுதிகளில் போட்டியிட்டன. இதில், சசிகலாவின் கட்சி மட்டும் 64 தொகுதிகளில் களம் கண்டது.

தேர்தலில் ராமதாஸ், சசிகலாவால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று கூறப்பட்டாலும், குறிப்பிட்ட 4 தொகுதிகளில் அகில இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்றக்கழக வேட்பாளர்கள் அதிக வாக்குகளை பெற்று, பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் 3 அ.தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றியை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

முதுகுளத்தூர் தொகுதியில் சசிகலா கட்சி சார்பில் களம் இறக்கப்பட்ட ராம்குமார் பாண்டியன் 40,422 வாக்குகளை பெற்றார். இந்த வாக்கு அ.தி.மு.க. வேட்பாளர் மலேசியா பாண்டியனுக்கு கிடைத்திருந்தால், அவர் வெற்றி பெற்றிருப்பார். அதேபோல், உசிலம்பட்டி தொகுதியில் சசிகலா கட்சி சார்பில் களம் இறக்கப்பட்ட அய்யப்பன் 16,620 வாக்குகளை பெற்றார். இந்த வாக்கு அ.தி.மு.க. வேட்பாளர் மகேந்திரனுக்கு கிடைத்திருந்தால் அவர் வாகை சூடியிருப்பார். மேலும், தென்காசி தொகுதியில் சசிகலா கட்சி சார்பில் போட்டியிட்ட பூசத்துரை 7,715 வாக்குகளை பெற்றார். இவர் வாக்குகளை பிரித்தது, அ.தி.மு.க. வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியனின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இதேபோல், சாத்தூர் தொகுதியில் சசிகலா கட்சி சார்பில் போட்டியிட்ட இசக்கிராஜா 11,602 வாக்குகளை பெற்றார். இந்த வாக்கு அ.தி.மு.க. கூட்டணியை சேர்ந்த பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு கிடைத்திருந்தால் அவர் வெற்றி பெற்றிருப்பார்.