சென்னை,
சென்னையில் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி என்.சி.சி. மாணவர்கள் சைக்கிள் பேரணி நடத்தினர்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
'போதைப்பொருள் இல்லாத இந்தியா' என்ற பிரசாரத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கான என்.சி.சி. இயக்குநரகத்தின் கீழ், சென்னை-ஏ குழுமம் சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. சென்னை கிழக்குக்கடற்கரை சாலை உத்தண்டி சுங்கச்சாவடியிலிருந்து 20 கி.மீ. தூரத்திற்கு மிதிவண்டிப் பேரணி நடைபெற்றது.
என்.சி.சி. துணைத் தலைமை இயக்குநர் கமடோர் நம்பியாத் சுதீப் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில், பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த என்.சி.சி. மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். பதாகைகள் மற்றும் வாசக அட்டைகளை ஏந்திச் சென்ற கேடட்டுகள், "போதைப்பொருளைத் தவிர்த்து, வாழ்க்கையைத் தேர்ந்தெடுங்கள்" என்ற செய்தியைப் பரப்பியதுடன், ஆரோக்கியமான, சுறுசுறுப்பான மற்றும் போதைப்பொருள் இல்லாத வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்குமாறு இளைஞர்களை வலியுறுத்தினர்.
போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான போராட்டத்தில் இளைஞர்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் முக்கிய பங்கை இந்தப் பேரணி முன்னிலைப்படுத்தியது. ஆரோக்கியமான, வலிமையான மற்றும் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை என்சிசி கேடட்டுகள் மீண்டும் வெளிப்படுத்தினர். இப்பேரணி உத்தண்டியில் நிறைவடைந்தது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.