திருச்சி,
பிரதமர் மோடி பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் திருச்சி பஞ்சப்பூரில் நாளை (புதன் கிழமை) மாலை நடக்கிறது. கடந்த மாதம் திருவள்ளூரில் பிரதமர் மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி. வி.தினகரன், பா.ம.க. தலைவர் அன்புமணி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் முதன்முறையாக ஒன்றாக பங்கேற்றனர். பின்னர் 2-வது முறையாக புதுச்சேரி மற்றும் மதுரையில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அந்த வகையில் மூன்றாவது முறையாக பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நாளை திருச்சியில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பா.ம.க. தலைவர் அன்புமணி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், ஐ.ஜே.கே. தலைவர் பச்சமுத்து மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த பொதுக்கூட்டத்துக்கு 30 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொண்டர்கள் அமர 76 ஆயிரம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. மேலும் இதில் 5 லட்சம் தொண்டர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மத்திய மண்டலத்தைச் சேர்ந்த 12 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். முன்னதாக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர், டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வருகிறார் அங்கிருந்து ஹெலிகாப்டரில் பொதுக்கூட்டம் நடைபெறும் பஞ்சப்பூர் பகுதிக்கு செல்கிறார்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. டெல்லியில் இருந்து வருகை தந்த சிறப்பு பாதுகாப்பு குழு ஐ.ஜி. நவநீக்குமார், திருச்சியில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். மேலும் பொதுக் கூட்டம் நடை பெறும் முன்னேற்பாடுகளை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகள், பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், திருச்சி மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் மேற்பார்வையிட்டு கவனித்து வருகின்றனர்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி மூன்றாவது முறையாக நாளை தமிழகம் வரும் நிலையில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். நேற்று திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.
தமிழ்நாட்டில் எப்போதும் என காவிக்கு இடமில்லை கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார். இவற்றுக்கெல்லாம் பிரதமர் மோடி நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பொதுக்கூட்டத்துக்கு முன்னதாக அதே பகுதியில் மத்திய அரசின் விழா நடைபெறுகிறது. இதை பிரதமர் மோடி புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளார். தி.மு.க. மாநாட்டை தொடர்ந்து பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
நாளை மார்ச் 11 -ம் தேதி மாலை 6:30 மணியளவில் திருச்சிராப்பள்ளியில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பேரணியில் தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் நானும் இணைய உள்ளேன். மாநிலம் முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரபலமடைந்து வருவதால் திமுக அதிர்ச்சியடைந்துள்ளது.
திமுகவின் தவறான நிர்வாகத்தையும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையும் தமிழக மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நம்பிக்கை மற்றும் முன்னேற்ற நிகழ்ச்சி நிரலுடன் இணைகிறார்கள் என பதிவிட்டுள்ளார்