தமிழக செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே தாய் கண்முன்னே லாரி சக்கரத்தில் சிக்கி 12-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஸ்ரீபெரும்புதூர்,

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பாடிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி சாந்தி. இவர்களது 2-வது மகள் அர்ச்சனா (வயது 16). இவர் ஸ்ரீபெரும்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

விபத்து

நேற்று இரவு அர்ச்சனா தனது தாய் சாந்தியுடன் பைக்கில் ஸ்ரீபெரும்புதூர் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். சாந்தி வண்டியை ஓட்டினார். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கலவை லாரி திடீரென மொபட் மீது மோதியது. இதில் தாய்-மகள் இருவரும் பைக் உடன் சாலையில் விழுந்தனர். அப்போது லாரியின் சக்கரத்தில் சிக்கிய அர்ச்சனா பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ஸ்ரீபெரும்புதூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அர்ச்சனா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

வழக்குப்பதிவு

தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் விரைந்து வந்து, அர்ச்சனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விபத்து நடந்ததும் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். தாய் கண்முன்பே மகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.