நயினார் நாகேந்திரன் 
தமிழக செய்திகள்

தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு உதவ வேண்டும் - நயினார் நாகேந்திரன்

11 மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பாக கடிதம் எழுதியுள்ளோம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு உதவ வேண்டும் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

11 மீனவர்கள் கைது

கடந்த 5 ஆம் தேதி, வானிலை மாற்றங்களாலும், படகுகளின் என்ஜின்கள் பழுதான காரணத்தினாலும் எதிர்பாரா விதமாக நெடுந்தீவு கடற்பகுதிக்குள் சென்று விட்ட, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது மிகுந்த மன வேதனையளிக்கிறது.

கைது நடவடிக்கை

தங்களது வாழ்வாதாரத்திற்காக மீன்பிடி தொழிலையே சார்ந்துள்ள அவர்களது குடும்பங்களுக்கு, இந்த கைது நடவடிக்கை கடும் துயரத்தையும் பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படை

எனவே, மீனவ சமுதாயத்தை என்றும் தாயுள்ளத்துடன் அணுகும் நமது மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர், உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பாக கடிதம் எழுதியுள்ளோம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.