சென்னை,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"நீட் தேர்வை முற்றாகக் கைவிடவேண்டும்!
மே-16 அன்று திக ஒருங்கிணைக்கும் ஆர்ப்பாட்டத்தில் விசிக பங்கேற்கும்!
இளநிலை மருத்துவக் கல்விக்கான ( எம்பிபிஎஸ்) நுழைவுத் தேர்வு (நீட்) கடந்த மே -03 ஆம் தேதி நடைபெற்றது. ஆனால் அந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னரே கசிந்தது என்னும் புகாரினையொட்டி அந்தத் தேர்வு செல்லாதென கடந்த மே-13 அன்று தேசியத் தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது. அதனையடுத்து அதே தேர்வு ஜூன் 21 அன்று மீண்டும் நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
'நீட்' தேர்வே வேண்டாமென தொடக்கத்திலிருந்தே விசிக வலியுறுத்தி வருகிறது. அரியலூர் அனிதாவைப் போல ஏராளமான இளம் தலைமுறையினர் நீட் தேர்வால் பலியாகியுள்ளனர். அத்துடன் இத்தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதும் தொடர்கிறது.
தற்போது நடைபெற்ற வினாத்தாள் கசிவு என்னும் முறைகேட்டினால், நடந்த தேர்வு செல்லாதென அறிவிக்கும் சூழல் எழுந்துள்ளது. இதனால் தேசம் முழுவதும் 22 இலட்சம் மாணவர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், இதனைக் கண்டித்தும், நீட் தேர்வு முறையை முற்றாகக் கைவிட வேண்டுமென வலியுறுத்தியும் தமிழகம் தழுவிய அளவில் திக ஒருங்கிணைக்கும் ஆர்ப்பாட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கிறது. சென்னையில் விசிக சார்பில் நான் கலந்து கொள்கிறேன்.
இயக்கத் தோழர்கள் அவரவருக்கான சொந்த மாவட்டங்களில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்க வேண்டுகிறேன்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.