தமிழக செய்திகள்

நீட் மறுதேர்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 5 மையங்களில் 2,015 பேர் எழுத உள்ளனர்

நீட் மறு தேர்வு எழுதுபவர்கள் நாளை காலை 11 மணிக்கு முன்னரே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்குள் ஆஜராகிட வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி,

நாளை நடைபெற உள்ள நீட் மறு தேர்வினை தூத்துக்குடி மாவட்டத்தில் 5 மையங்களில் 2,015 பேர் எழுத உள்ளனர் என கலெக்டர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

5 தேர்வு மையங்கள்; 2,015 தேர்வர்கள்:

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய தேர்வு முகமை (NTA) மூலம் நீட் மறு தேர்வு 21.6.2026 அன்று மதியம் நடைபெறவுள்ளது. இத்தேர்வு தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் எட்டையபுரம் ஆகிய வட்டங்களில் மொத்தம் 5 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. இத்தேர்வினை மொத்தம் 2,015 தேர்வர்கள் எழுதவுள்ளனர் என மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

கலெக்டர் அறிவுறுத்தல்:

நீட் மறு தேர்விற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து காவல்துறை, தீயணைப்பு துறை, போக்குவரத்து துறை, மின்சார வாரியம், சுகாதாரத்துறை, பள்ளி கல்வித்துறை, கல்லூரி கல்வித்துறை ஆகிய தொடர்பு துறைகளுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து துறைகளும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு எளிதாக சென்றடையும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

கட்டுப்பாடுகள்:

தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் NTA-ஆல் நிர்ணயிக்கப்பட்டுள்ளவாறு தேர்வு நாளான 21.6.2026 அன்று காலை 11 மணிக்கு முன்னரே தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்குள் ஆஜராகிட வேண்டும். உரிய நேரமான மதியம் 1.30 மணிக்கு பின்னர் வருகை தரும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

தேர்வு எழுத வரும் தேர்வர்கள் தேர்வுக்கூடத்திற்குள் பேஜர், செல்போன், கால்குலேட்டர், Smart Watch, தகவல்கள் பதிவு செய்யும் மின் சாதனங்கள். குறிப்பேடு, புத்தகங்கள், உறைகள் மற்றும் கைப்பைகள் போன்றவை கொண்டு செல்ல அனுமதி இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.