தமிழக செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 11 மையங்களில் நீட் மறுதேர்வு: 6,559 பேர் எழுத உள்ளனர்

நீட் மறு தேர்வினை எழுத வரும் மாணவர்கள் மதியம் 1:30 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்குள் செல்ல வேண்டும் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை மற்றும் திருநெல்வேலி வட்டங்களில் உள்ள 11 மையங்களில் நடைபெற உள்ள நீட் மறுதேர்வினை 6,559 பேர் எழுத உள்ளனர் என கலெக்டர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.

தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நீட் மறுதேர்வு நாளை (21.6.2026) நடைபெறவுள்ளதை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் தலைமையில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்வு நடத்துதல், மாணவர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் கூறியதாவது:

11 தேர்வு மையங்கள்; 6.559 தேர்வர்கள்:

நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை மற்றும் திருநெல்வேலி வட்டங்களில் உள்ள 11 தேர்வு மையங்களில் இந்த நீட் மறுதேர்வு ஜூன் 21, ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இந்த தேர்வை மொத்தம் 6,559 பேர் எழுத உள்ளனர். பொதுவான தேர்வர்களுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரையும், மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு (PwD / PwBD) மதியம் 2 மணி முதல் மாலை 6.20 மணி வரையும் தேர்வு நடைபெறும்.

அடிப்படை மற்றும் பேருந்து வசதிகள்:

தேர்வர்கள் தடையின்றி வந்து செல்ல போதுமான சிறப்புப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தேர்வு மையங்களிலும் குடிநீர் உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகளும், அவசர மருத்துவ தேவைகளுக்காக ஒவ்வொரு மையத்திற்கும் தனித்தனியாக மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் பணியமர்த்தப்பட்டுள்ளன.

நேரக் கட்டுப்பாடு:

தேர்வெழுத வரும் மாணவர்கள் மதியம் 1.30 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்குள் செல்ல வேண்டும். மதியம் 1.30 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு சிரமமும் ஏற்படாதிருக்க, தேர்வு மையத்தின் இருப்பிடத்தை தேர்வர்கள் ஒரு நாளுக்கு முன்பே நேரில் சென்று சரிபார்த்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆடை மற்றும் ஆபரணக் கட்டுப்பாடுகள்:

தேர்வு எழுதுவோர் தங்கள் மதம் அல்லது பழக்கவழக்கங்களின்படி குறிப்பிட்ட ஆடைகளை அணிய வேண்டியிருந்தால், முழுமையான சோதனைக்கு ஏதுவாக தேர்வு மையத்திற்கு முன்கூட்டியே வர வேண்டும். தேர்வர்கள் முழுக்கை சட்டை (Full sleeve shirts) மற்றும் ஷூ (Shoes) அணிந்து வரக் கூடாது; சாதாரண காலணிகளுக்கே அனுமதி உண்டு. தேர்வெழுத வரும் திருமணமான பெண்கள் தாலி செயின் அணிந்து கொள்ள அனுமதி உண்டு, ஆனால் மற்ற ஆபரணங்கள் அணிந்து வர அனுமதியில்லை.

தனிப்பட்ட முறையில் வெளிப்படையான (Transparent) தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்து வரலாம். மொபைல் போன், மின்னணு சாதனங்கள், டிஜிட்டல் கடிகாரங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிற பொருட்களை தேர்வு மையத்திற்குள் கொண்டு செல்ல முற்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் (Admit Card) தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ள விதிமுறைகளை தேர்வர்கள் முழுமையாக படித்து கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.