தமிழக செய்திகள்

நாடுமுழுவதும் 551 நகரங்களில் இன்று ‘நீட்’ மறுதேர்வு

பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை தேசிய தேர்வு முகமை கையில் எடுத்து இருக்கிறது.

சென்னை,

நாடு முழுவதும் 551 நகரங்களில் 'நீட்' மறுதேர்வு இன்று நடக்கிறது. இந்த தேர்வை 22.7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதுகிறார்கள்.

'நீட்' மறுதேர்வு

மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான 'நீட்' எனும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் மாணவ-மாணவிகள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடக்கிறது. அந்த வகையில் 2026-27-ம் கல்வியாண்டுக்கான மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு கடந்த மாதம் (மே) 3-ந்தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 22 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதி இருந்தனர்.

தேர்வில் வினாத்தாள் கசிவு புகார் எழுந்ததையடுத்து அது விசாரிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், நீட் தேர்வை மத்திய அரசு ரத்துசெய்து அறிவிப்பை வெளியிட்டது. அவ்வாறு ரத்து செய்யப்பட்ட 'நீட்' மறுதேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் 551 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 இடங்களிலும் நடைபெற இருக்கிறது. இதற்காக 5 ஆயிரத்து 500-க் கும் மேற்பட்ட மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை

இந்த தேர்வை கடந்த முறை ரத்து செய்தபோது எழுதி இருந்த மாணவ- மாணவிகளின் எண்ணிக்கையிலேயே இந்த முறையும் எழுதுவார்கள் என சொல்லப்படுகிறது. அதன்படி அவர்களுக்கான ஹால்டிக்கெட் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. சுமார் 22.7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுத இருக்கும் இந்த தேர்வில், கடந்த முறை வந்த வினாத்தாள் கசிவு புகார் போல் எந்த முறைகேட்டுக்கும் இடம் இல்லாமல் தேர்வை நடத்தி முடிக்க ஏதுவாக தேர்வை நடத்தக்கூடிய தேசிய தேர்வு முகமை பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை கையில் எடுத்து இருக்கிறது.

தமிழ்நாட்டில்...

தேர்வு மையத்துக்குள் பிற்பகல் 1.30 மணிக்கு முன்னதாக தேர்வர்கள் வர அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். அதன்பிறகு வருபவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.15 மணி வரை தேர்வு நடக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில், 31 மாவட்டங்களில் அமைக்கப்பட்டு இருக்கும் 307 தேர்வு மையங்களில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 489 மாணவ- மாணவிகள் தேர்வை எழுத இருக்கிறார்கள்.

சென்னையில் மட்டும் 43 தேர்வு மையங்கள் அமைக் கப்பட்டு இருக்கின்றன. இங்கு சுமார் 21 ஆயிரம் பேர் எழுத இருப்பதாக சொல்லப்படுகிறது. எந்த முறைகேடுக்கும் இடம் இல்லாமல், தேர்வை சரியாக நடத்தி முடிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக் டர்களுக்கும், தலைமைச்செயலாளர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

கடும் கட்டுப்பாடுகள்

கடந்த முறை தேர்வு ரத்து செய்யப்பட்டதால் இந்த மறுதேர்வுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. வினாத்தாள் தயாரிப்பு பணியில் இருந்த ஒருவர்கூட இன்னும் வெளியே விடப்படவில்லை. ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளனர். தேர்வை மிகவும் நியாயமான முறையில் நடத்தி முடித்திட தேசிய தேர்வு முகமை விழிப்புடன் பணியாற்றி வருகிறது.

பேனா தேவையில்லை

வீட்டில் இருந்து தேர்வுக்கூடத்துக்கு செல்லும்போது ஹால் டிக்கெட், அடையாள அட்டை, 2 பாஸ்போர்ட் அளவு புகைப்ப டங்கள் மற்றும் தண்ணீர் தேவையென்றால் தண்ணீர் பாட்டில் (வெளிப்படையானது) ஆகியவற்றை மட்டும் எடுத்துச் சென்றால் போதுமானது.

செல்போன், டேப்லெட் மற்றும் ஸ்மார்ட் கைக்கெடிகாரம் போன்றவை வேண்டாம். செல்போன் எடுத் துச் செல்வதாக இருந்தால் அதை வெளியே யாரிடமாவது கொடுக்க வேண்டும். பேனாகூட எடுத்துச் செல்ல வேண்டாம். தேர்வுக்கான பிரத்யேக பேனா, தேர்வு அறையில் வழங்கப்படும். தேர்வுக்கூடத்தில் கண்காணிப்பாளர் சொல்வதை கவனமாகக் கேட்டு அதன்படி நடப்பது அவசியம். தேர்வு அறையில் யாரிடமும் பேசாமல் இருப்பது நல்லது என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.