தமிழக செய்திகள்

மூதாட்டியிடம் 4 சவரன் நகை திருடிய பக்கத்து வீட்டுக்காரர் கைது

தூத்துக்குடி மாவட்டம், காயாமொழி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் இருந்து 4 சவரன் நகைகளை பக்கத்து வீட்டுக்காரர் திருடிக் கொண்டு தப்பி சென்றார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், காயாமொழி வடக்கு தெருவை சேர்ந்தவர் கேசவஆதித்தன். இவரது மனைவி திரிபுரசுந்தரி (வயது 78). கணவர் மறைந்துவிட்ட நிலையில், பிள்ளைகளும் வெளியூரில் வசித்து வந்ததால், பார்வைக் குறைபாடு மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட திரிபுரசுந்தரியைப் பராமரிக்க 2 பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

கடந்த 2022-ம் ஆண்டு ஒரு நாள் பணியாளர்கள் வராத நேரத்தில், திரிபுரசுந்தரி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட அக்கம் பக்கத்தில் வசித்து வந்த பாரூக் என்பவரது மகன் அகமது மீரா சாகிப் (வயது 52), தொலைக்காட்சி பார்ப்பது போல மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

அங்கு மூதாட்டி தூங்கிக் கொண்டிருந்ததைப் பயன்படுத்திக் கொண்ட அகமது மீரா சாகிப், அவர் அணிந்திருந்த 3 சவரன் தங்கச் சங்கிலி, அரை சவரன் மோதிரம் மற்றும் அரை சவரன் கம்மல் என மொத்தம் 4 சவரன் நகைகளைத் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 2 ஆண்டுகளாக அவரை தேடி வந்தனர். இந்த நிலையில், திருச்செந்தூர்-நெல்லை சாலையில் அவர் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வம் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அகமது மீரா சாகிப்பை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து திருடப்பட்ட நகைகளை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். முதியவர்களை குறிவைத்து திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.