விஜய் 
தமிழக செய்திகள்

45 பவுன் நகை,ரூ.1 லட்சம் திருடிய பக்கத்து வீட்டுக்காரர்: தாய், தங்கையுடன் மொத்த குடும்பமும் கைது

கொள்ளை வழக்கில் தொடர்புடைய மற்றொரு முக்கிய குற்றவாளியான மவுலானா யூசுப், ஏற்கனவே வேறொரு வழக்கில் கைதாகி சிறையில் இருப்பது தெரியவந்துள்ளது.

திருப்பூர்,

திருப்பூரில் மளிகை கடைக்காரர் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்த வழக்கில், பக்கத்து வீட்டில் வசித்த வாலிபர், அவரது தாய், தங்கை உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பூட்டிய வீடு

தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் அருண்ராஜ் (வயது 45). இவர் கடந்த 10 ஆண்டுகளாக திருப்பூர் கல்லூரி சாலை, மாஸ்கோ நகர் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு, மளிகைக் கடை நடத்தி வருகிறார்.

தசரா பண்டிகை

கடந்த அக்டோபர் 18-ந் தேதி தசரா பண்டிகையை முன்னிட்டு, அருண்ராஜ் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்றார். பண்டிகை முடிந்து கடந்த 23-ந் தேதி அவர் திருப்பூர் திரும்பினார். அப்போது அவரது வீட்டின் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

45 பவுன் கொள்ளை

உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 45 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அருண்ராஜ் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

சிசிடிவி கேமரா ஆய்வு

சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் அக்குவேறு ஆணிவேறாக ஆய்வு செய்தனர். அதில், அருண்ராஜ் வீட்டின் அருகிலேயே குடும்பத்துடன் வசித்து வந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் (வயது 24) என்பவரின் நடமாட்டம் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

பக்கத்து வீட்டுக்காரர் கைவரிசை

இதையடுத்து விஜயைப் பிடித்து போலீசார் தங்களது பாணியில் விசாரித்தபோது, அவர்தான் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். அருண்ராஜ் குடும்பத்துடன் ஊருக்குச் சென்றதை நோட்டமிட்ட விஜய், தனது நண்பர்களான தென்காசியைச் சேர்ந்த அப்துல் ரசாக் மற்றும் மவுலானா யூசுப் ஆகியோருடன் இணைந்து நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து நகையையும், பணத்தையும் சுருட்டியது அம்பலமானது.

குடும்பத்தினர் முழுமையாக உடந்தை

மேலும், கொள்ளையடித்த 45 பவுன் நகைகளை விஜய் அப்படியே வைத்திருக்கவில்லை. தனது தாயார் அமராவதி, தங்கை சரண்யா மற்றும் தங்கையின் கணவர் ஆனந்த் ஆகியோரின் உதவியுடன் பல்வேறு கடைகளில் விற்று பணமாக்கியுள்ளார். கொள்ளை சம்பவத்திற்கு விஜய்யின் குடும்பத்தினர் முழுமையாக உடந்தையாக இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

5 பேர் சிறையிலடைப்பு

இதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக விஜய், அவரது தாயார் அமராவதி, தங்கை சரண்யா, மாமனார் ஆனந்த் மற்றும் கொள்ளைக்கு உதவிய நண்பர் அப்துல் ரசாக் ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கடைகளில் விற்கப்பட்ட 13 பவுன் நகைகள் முதற்கட்டமாக மீட்கப்பட்டன. பிடிபட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய மற்றொரு முக்கிய குற்றவாளியான மவுலானா யூசுப், ஏற்கனவே வேறொரு வழக்கில் கைதாகி சிறையில் இருப்பது தெரியவந்துள்ளது. அவரிடம்தான் மீதமுள்ள நகைகளும், பணமும் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து, மீதி நகைகளையும் பணத்தையும் மீட்க திருப்பூர் வடக்கு போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT