தமிழக செய்திகள்

முதியவர்கள் பணமோசடியால் இழந்த ரூ.45.18 லட்சம் மீட்பு: நெல்லை சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை

நெல்லையைச் சேர்ந்த முதியவர்கள் பறிகொடுத்த பணத்தில், ரூ.45.18 லட்சத்தை, சைபர் கிரைம் போலீசார் மீட்டு, முதியவர்களின் வங்கியில் செலுத்தியதற்கு, அந்த முதியவர்கள் போலீஸ் கமிஷனர் மணிவண்ணனை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரத்தை சேர்ந்த வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமகன் நடராஜன் என்பவரின் செல்போனிற்கு தொடர்பு கொண்டு பேசிய நபர் தன்னை ஒரு போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு உங்களுடைய வங்கி கணக்கில் சட்டவிரோத பணம் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும், இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், தாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்ப வேண்டும் என்று கூறியதை நம்பிய முதியவர் தன்னுடைய வங்கியில் இருந்து ரூ.29 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை அனுப்பி ஏமாற்றம் அடைந்துள்ளார்.

இதுகுறித்து அந்த முதியவர் திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் 6.2.2026 அன்று கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் அறிவுறுத்தலின்படி குற்றவாளிகள் தேடப்பட்டு வந்த நிலையில், பாதிக்கப்பட்டவரின் வங்கி கணக்கிலிருந்து பணபரிமாற்றம் செய்யப்பட்ட வங்கி கணக்கானது இருப்பு தொகையுடன் முடக்கப்பட்டு, மேற்சொன்ன விபரம் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது. மாநகர காவல் துறையின் துரித நடவடிக்கையால், நீதிமன்ற ஆணை மூலம் மனுதாரர் இழந்த ரூ.29 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை பாதிக்கப்பட்ட நபரின் வங்கி கணக்கில் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற மூத்த குடிமகன் ரங்கராஜன் என்பவரின் செல்போனிற்கு தொடர்பு கொண்டு பேசிய நபர் தன்னை ஒரு மும்பை போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டு முதியவரின் ஆதார் எண்ணை கூறி, உங்களுடைய வங்கி கணக்கில் இருந்து சட்டவிரோத பணம் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும், இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் தாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்ப சொல்லி அவரை நம்ப வைத்ததின் பேரில் முதியவர் தன்னுடைய வங்கியில் இருந்து ரூ.15 லட்சம் பணத்தை அனுப்பியதாகவும், பின்னர் மேலும் பணம் கேட்டதால் தான் ஏமாற்றம் அடைந்ததை அவர் அறிந்தார்.

இதனையடுத்து மோசடியாக பணம்பறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தருமாறு திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் முதியவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மாநகர காவல் துறையின் துரித நடவடிக்கையால் 10.2.2026 அன்று சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த தகரம் சாய் சித்தார்த் (வயது 26), அவரது தந்தை தகரம் ஸ்ரீநிவாஸ்(51) மற்றும் ஐதராபாத் பகுதியை சேர்ந்த சுரேஸ்குமார் மகன் சாய்கிரண்(38) ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கன். மேலும் மாநகர காவல் துறையின் துரித நடவடிக்கையால் நீதிமன்ற ஆணை மூலம் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து மோசடி செய்யப்பட்ட பணத்தில் ரூ.12 லட்சம் பணத்தை மீட்டு பாதிக்கப்பட்ட நபரின் வங்கி கணக்கில் வழங்கப்பட்டது.

மேற்சொன்ன மூத்த குடிமகன்கள் நடராஜன் மற்றும் ரங்கராஜன் ஆகியோர் இழந்த பணத்தை சைபர் குற்றவாளிகளிடமிருந்து மீட்டு அவர்கள் வங்கி கணக்கில் வழங்கப்பட்டதற்கு 19.2.2026 அன்று மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன், சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான சைபர் கிரைம் காவல் துறையினருக்கும் அந்த முதியவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள்.

மேலும் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் இதுவரை மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் அறிவுறுத்தலின்படி, மாநகர சைபர் கிரைம் காவல் துறையின் துரித நடவடிக்கையால், மாநகர சைபர் கிரைமில் பெறப்பட்ட புகார்களில் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த ரூ.45 லட்சத்து 18 ஆயிரதது 258 பணம் மீட்கப்பட்டு அவர்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி மற்றம் www.cybercrime.gov.in என்ற இணையதளம் வாயிலாக புகார்களை பதிவு செய்யலாம் எனவும், இதுமாதிரியான மோசடியில் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் விழிப்புடன் இருக்குமாறு திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.