நெல்லை,
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிய நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானவர்கள் குடும்பத்துடன் தங்களுடைய சொந்த ஊரான நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
தற்போது கோடைவெயில் சுட்டெரித்து வரும் நிலையில், அதில் இருந்து தப்பிக்கவும், மன சோர்வை நீக்கவும். பலரும் குடும்பத்துடன் சுற்றுலாவுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். அந்த வகையில் நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டக்கூடிய அகத்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
இந்த அருவிக்கு சேர்வலாறு மற்றும் காரையார் அணைகளில் இருந்து தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 25 அடி உயரத்தில் இருந்து விழும் இந்த அருவியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் அகஸ்தியர் அருவியில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை வனத்துறை சார்பில் ரூ.20 வசூலிக்கப்பட்ட நிலையில் ரூ.10 அதிகரித்து ரூ.30 வசூலிக்கப்படுகிறது. அரசு முறையான அரசாணை வெளியிட்டபின் கட்டணம் குறைப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே அகஸ்தியர் அருவி மற்றும் மணிமுத்தாறு அருவிகளுக்கு செல்கின்ற பயணிகளை வனத்துறையினர் சோதனைச் சாவடியில் சோதனை செய்த பின்னரே அனுமதித்து வருகின்றனர். இங்கு பிளாஸ்டிக் மற்றும் மது பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.