தமிழக செய்திகள்

தன்னை உருவாக்கியது திமுக தலைவர்.. முதல்-அமைச்சர் விஜய் படம் அருகே அமர்வதை தவிர்க்கும் நெல்லை மேயர்

சோபாவில் அமர்ந்து மேயர் ராமகிருஷ்ணன் பணியாற்றுகின்ற வீடியோ காட்சி கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

நெல்லை,

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர், துணை மேயருக்கு தனித்தனியாக அறைகள் உள்ளன. இந்த அறைகளில் இருந்து பொதுமக்களை சந்தித்து, அவர்கள் கொடுக்கின்ற கோரிக்கை மனுக்களை வாங்குவது, கவுன்சிலர்கள், அதிகாரிகளை சந்தித்து பேசுவது வழக்கம்.

இதுதவிர செவ்வாய்க்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மேயர், துணை மேயர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்குவார்கள்.

நெல்லை மாநகராட்சி மேயராக தி.மு.க.வை சேர்ந்த ராமகிருஷ்ணன் உள்ளார். இவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில், மேயர் இருக்கைக்கு மேலே முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் படங்கள் இருந்தன.

முதல்-அமைச்சர் விஜய்யின் புகைப்படம்

அருகிலுள்ள மேசையில் முன்னாள் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படம் உள்ளது. தற்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் முதல்-அமைச்சர் விஜய்யின் படத்தை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கருணாநிதி, மு.க.ஸ்டாலின் படத்திற்கு அருகில் முதல்-அமைச்சர் விஜய்யின் புகைப்படமும் வைக்கப்பட்டது. ஆனால் மேயர் ராமகிருஷ்ணன், முதல்-அமைச்சரின் புகைப்படத்துக்கு கீழே உள்ள மேயர் இருக்கையில் அமர்வதை தவிர்த்து வருகிறார்.

சோபாவில் அமர்ந்து...

அதற்கு பதிலாக அந்த அறையிலேயே மற்றொரு இடத்தில் உள்ள ஒரு சோபாவில் அமர்ந்துகொண்டு தன்னை சந்திக்க வரும் கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார். சோபா அருகில் மேசை, நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. மேசையில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படமும், சிறிய அளவிலான கருணாநிதி சிலையும் வைக்கப்பட்டுள்ளன.

முதல்-அமைச்சர் விஜய் படம் அருகே இருக்கையில் அமராமல் சோபாவில் அமர்ந்து மேயர் ராமகிருஷ்ணன் பணியாற்றுகின்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இதனிடையே இதுதொடர்பாக விளக்கம் அளித்த மேயர் ராமகிருஷ்ணன், தன்னை உருவாக்கிய திமுக தலைவர் அருகே அமர்ந்து பணியாற்றுவதாகவும், முதல்-அமைச்சரின் புகைப்படத்திற்கு கீழ் அமர்ந்து பணியாற்ற விருப்பம் இல்லை என்பதுபோல் இல்லை என்றும் அவர் கூறினார்.