தமிழக செய்திகள்

தேர்தலை அமைதியாக நடத்த நடவடிக்கை: நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உறுதி

திருநெல்வேலி மாநகரத்தின் 50வது புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்ட தேஷ்முக் சேகர் சஞ்சய் இன்று முறைப்படி தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராகப் பணியாற்றி வந்த மணிவண்ணன் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, புதிய கமிஷனராக தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமிக்கப்பட்டார். இன்று காலை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த புதிய கமிஷனருக்கு, காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். பின்னர் அவர் கோப்புகளில் கையெழுத்திட்டுப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பொறுப்பேற்ற பின் போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

திருநெல்வேலி மாநகரில் சட்டம்- ஒழுங்கைப் பராமரிப்பதற்கும், குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும் முன்னுரிமை அளிக்கப்படும். குறிப்பாக, தமிழகத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி, மிகவும் அமைதியான முறையிலும் நேர்மையாகவும் நடத்துவதற்குத் தேவையான அனைத்துத் தீவிர நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும். மாநகர மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்களது முதன்மையான நோக்கம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.