நெல்லை,
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவியை, அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டில் அந்த மாணவியை ஆசை வார்த்தை கூறி காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்றுள்ளார். அப்போது தனது நண்பர்களான முனீஸ்வரன் மற்றும் சின்னக்குட்டி ஆகியோரையும் அழைத்துள்ளார். மூவரும் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கின் விசாரணை நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கைதுசெய்யப்பட்ட 3 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது. மேலும் தண்டனை விபரம் விரைவில் வெளியிடப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டது. அதில், சின்னக்குட்டி என்பவருக்கு மரண தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும், முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், முனீஸ்வரனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மூவரும் பலத்த பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.