தமிழக செய்திகள்

அம்பை: நகை, பணம் கிடைக்காத ஆத்திரத்தில் வீட்டுக்கு தீ வைத்த கொள்ளையர்கள்

திருப்பூரில் உள்ள மகளை பார்ப்பதற்காக தனது மனைவியுடன் சென்றார்.

அம்பை,

கல்லிடைக்குறிச்சி அருகே திருடச்சென்ற வீட்டில் நகை, பணம் இல்லாததால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் அந்த வீட்டுக்கு தீ வைத்து தப்பிச் சென்றனர்.

மளிகை கடைக்காரர்

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை அடுத்த தெற்கு பாப்பான்குளம் மகாராஜா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிளைன்ஸ் ராஜ் (வயது 83). இவர் தனது வீட்டை ஒட்டியவாறு உள்ள அறையில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் திருப்பூரில் உள்ள மகளை பார்ப்பதற்காக தனது மனைவியுடன் சென்றார்.

நேற்று காலை இவரது வீட்டின் முன்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனைப் பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்து மணிமுத்தாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தனர். கிளைன்ஸ் ராஜூக்கும் செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து வீட்டுக் குள் சென்று போலீசார் ஆய்வு செய்தனர்.

தீ வைத்த கொள்ளையர்கள்

அப்போது வீட்டின் ஒரு அறையில் இருந்த மளிகை கடையின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. அதே நேரத்தில் வீட்டில் இருந்த படுக்கை அறையில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனே தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

கிளைன்ஸ் ராஜா வீட்டில் நகை, பணம் எதுவும் வைக்கவில்லை என்று போலீசாரிடம் தெரிவித்தார். எனவே அவரது வீட்டில் திருடச் சென்ற கொள்ளையர்கள் அங்கு நகை, பணம் எதுவும் இல்லாததால் ஆத்திரத்தில் படுக்கை அறைக்கு தீ வைத்து சென்றிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT