சேரன்மாதேவி
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் இசக்கி முத்து. இவரது மகன் மூக்காண்டி. இவர் நிதி நிறுவனம் வைத்து பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். அந்த நிறுவனத்திற்கான உரிமத்தை புதுப்பிப்பதற்காக சேரன்மாதேவி கிராம நிர்வாக அலுவலரான இதயக்கனியிடம் விண்ணப்பித்து இருந்தார். இதை பரிசீலனை செய்த அவர், உரிமத்தை புதுப்பிக்க ரூ.10 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் மூக்காண்டி அதிர்ச்சி அடைந்தார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், இதுகுறித்து நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை மூக்காண்டியிடம் கொடுத்து அனுப்பினர்.
அவர் அந்த பணத்தை வாங்கிக்கொண்டு கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றார். அங்கிருந்த இதயக்கனியின் உதவியாளரான வெங்கடேசனிடம் பணத்தை கொடுத்தார். இதை அங்கு மறைந்து இருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து சென்று இதயக்கனி, வெங்கடேசன் ஆகியோரை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து 2 பேரிடமும் பலமணி நேரம் விசாரணை நடத்தி அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சேரன்மாதேவியில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக பெண் அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.