நெல்லை,
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வறண்ட வானிலை நீடித்து வந்தாலும், ஒருசில மாவட்டங்களில் பரவலாக மழையும் பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியது. இந்த நிலையில் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறுக்கு மேல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, காக்காச்சி ஆகிய தேயிலை தோட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. மாஞ்சோலை 22 மில்லி மீட்டர், காக்காச்சி 30 மில்லி மீட்டர், நாலுமுக்கு 40 மில்லி மீட்டர், ஊத்து 36 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
தேயிலை தோட்டத்தில் பெய்த கனமழையால் மணிமுத்தாறு அருவி மற்றும் அதை தொடர்ந்து உள்ள மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 55 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நீர்வரத்து 201 கன அடியாக அதிகரித்து உள்ளது. 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 72 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக 200 கன அடி தாமிரபரணி ஆற்றிலும், 45 கன அடி பெருங்கால் பாசனத்துக்கும் திறந்து விடப்பட்டுள்ளது.