திருநெல்வேலி,
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆனிப்பெருந் தேரோட்டத்தை முன்னிட்டு ஜூன் 28-ந்தேதி டவுண் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தின் வரலாற்று சிறப்பு மிக்க நெல்லை டவுண் பகுதியில் உள்ள நெல்லையப்பர் காந்திமதியம்மாள் கோவில் ஆனிப்பெருந் தேரோட்டத் திருவிழா வரும் ஜூன் 28-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற உள்ளது. இந்தத் திருவிழாவின் போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வதால், டவுண் பகுதியில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏதும் நிகழாமல் அமைதியான முறையில் தேரோட்டம் நடைபெறுவதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நெல்லையப்பர் கோவில் வளாகத்தைச் சுற்றியுள்ள மற்றும் அதன் அருகாமையில் அமைந்துள்ள மதுபானக் கடைகள் மற்றும் பார்களைத் தற்காலிகமாக மூட வேண்டும் என உத்தரவிடப்படுகிறது. அதன்படி ஜூன் 28-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு நாள் மட்டும் பின்வரும் 5 அரசு மதுபானக் கடைகள் (டாஸ்மாக்) மற்றும் ஒரு தனியார் பார் ஆகியவை முழுமையாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டவுண் வடக்கு மவுண்ட் ரோடு - மதுபானக் கடை (கடை எண்: 10717), மணிப்புரம் சர்வீஸ் ரோடு - மதுபானக் கடை (எண்: 10718), நயினார்குளம் மார்க்கெட் - மதுபானக் கடை (எண்: 10733), நயினார்குளம் வத்தல் மார்க்கெட் - மதுபானக் கடை (எண்: 10724), தச்சநல்லூர் தேநீர்குளம் - மதுபானக் கடை (எண்: 10813), மணிப்புரம் சர்வீஸ் ரோடு (கடை எண்: 10718) அருகில் உள்ள தென்றல் மனமகிழ் மன்றம் (பார்).
இந்த உத்தரவை மீறி யாரேனும் அன்றைய தினம் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.