கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகாப்பாக மீட்டு வர வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்

வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகாப்பாக மீட்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்

சென்னை,

நேபாளத்தில் வடக்கு ராசுவா பகுதியில் இன்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கிராமத்திற்குள் புகுந்த வெள்ள நீரால் வீடுகள் அடியோடு அடித்துச் செல்லப்பட்டன. சாலைகள் மற்றும் பாலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதில், ஏராளமான பொதுமக்களும் இழுத்துச் செல்லப்பட்டனர். இதுவரையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளான சியாப்ரு மற்றும் திமுரே ஆகிய இடங்களில் மீட்பு ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முடியாததால் மீட்பு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் தமிழர்கள் உட்பட 105 இந்தியர்கள் மாயமாகி உள்ளனர்.

இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகாப்பாக மீட்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டின் கும்பகோணத்திலிருந்து 50-க்கும் அதிகமான பயணிகள் நேபாளத்திற்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், அங்கு வடக்கு ராசுவா பகுதியில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியதில், அவர்களில் 37-க்கும் மேற்பட்டோரின் நிலை என்ன என்பது தெரியவில்லை என ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன.

நேபாளத்தில் உள்ள மத்திய அரசின் வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் தமிழக அரசின் அதிகாரிகளும் இணைந்து, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு, விரைவில் தாயகம் அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.