தமிழக செய்திகள்

சூதாட்ட தகராறில் நேபாள வாலிபர் கத்தியால் குத்திக்கொலை: ஓட்டல் ஊழியர் விஜயவாடாவில் கைது

சென்னை பெருங்குடி பகுதியில் வெவ்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் நேபாள வாலிபர்கள் அறை எடுத்து தங்கி உள்ளனர்.

சென்னை,

சென்னை பெருங்குடி பகுதியில் சூதாட்ட தகராறில் நேபாள வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஓட்டல் ஊழியர் விஜயவாடாவில் கைது செய்யப்பட்டார்.

சூதாட்ட தகராறு

சென்னையை அடுத்த பெருங்குடி கோவிந்தசாமி நகரில் வெவ்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் நேபாள வாலிபர்கள், அறை எடுத்து தங்கி உள்ளனர். நேற்று அதிகாலை அவர்கள் அனைவரும் பணம் வைத்து சீட்டு (சூதாட்டம்) விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

பணம் தொடர்பாக முன்விரோதம்

இதில் தனியார் நிறுவனத்தில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்த கணேஷ் (வயது 26) என்பவருக்கும், ஓட்டலில் சைனீஸ் மாஸ்டராக வேலை செய்து வந்த கவுரவ்(25) என்பவருக்கும் இடையே பணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. ஏற்கனவே ரூ.2 ஆயிரம் தொடர்பாக இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

நேபாள வாலிபர் கத்தியால் குத்திக்கொலை

இதனால் ஆத்திரமடைந்த கவுரவ், தன்னிடம் இருந்த கத்தியால் கணேசை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த கணேசை அங்கிருந்தவர்கள் மீட்டு, விபத்தில் காயமடைந்ததாக கூறி அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் விபத்தில் ஏற்பட்ட காயங்கள் இல்லை என்பதை அறிந்த டாக்டர்கள், இதுகுறித்து துரைப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி கணேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஓட்டல் ஊழியர் தலைமறைவு

இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற துரைப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கணேசை, கவுரவ் கத்தியால் குத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான கவுரவை தேடி வந்தனர்.

ஓட்டர் ஊழியர் விஜயவாடாவில் கைது

இந்த நிலையில் ஓட்டல் ஊழியரான கவுரவ் ரெயிலில் தப்பிச் செல்வதை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து ரெயில்வே போலீசார் உதவியுடன் விஜயவாடா ரெயில் நிலையத்தில் அவரை மடக்கிப் பிடித்தனர். கவுரவை கைது செய்து சென்னைக்கு அழைத்து வருவதற்காக துரைப்பாக்கம் போலீசார் விஜயவாடா சென்றுள்ளனர்.

SCROLL FOR NEXT