சென்னை,
மேகதாது அணை பிரச்சினையில் புதிய நடுவர் மன்றம் அமைப்பதே சிறந்தது என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
சட்டசபை வளாகத்தில் திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியளர்களை சந்தித்தார். அப்போது மேகதாது அணை தொடர்பான தீர்மானத்தில் திருத்தம் செய்தது தொடர்பாக அவர் கூறியதாவது;
”மேகதாது அணை கட்டக்கூடாது என தமிழக சட்டசபையில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்த விவகாரத்தில் நமது தரப்பு நியாயங்களை அப்போதைய பிரதமர், மந்திரிகளிடம் எடுத்து கூறி வருகிறோம். கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ் என யார் ஆட்சிக்கு வந்தாலும் மேகதாது அணையை கட்டுவோம் என அடாவடியாக கூறி வருகின்றனர். கர்நாடக அரசின் செயல் தமிழக விவசாயிகளுக்கு பேராபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேகதாது அணைக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியதன் பேரில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இது மீண்டும் சட்டசபையில் இன்று விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அணை கட்டுவதை தடுக்க புதிய நடுவர் மன்றம் தேவை என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். புதிய நடுவர் மன்றம், திமுகவின் முடிவு அல்ல.. தமிழக அரசின் முடிவு.
விவசாய மக்களின் நலனை பாதுகாக்கும் விஷயத்தில் மீண்டும் விவாதம் எழுந்துள்ளது. இது தேவையற்றது. புதிய நடுவர் மன்றம் அமைப்பதே ஆக்கப்பூர்வமானதாக இருக்கும். காவிரி நதிநீர் பங்கீட்டில் எந்த பிரச்சினையும் வராது. ஆனால் மேகதாது அணை பிரச்சினையில் புதிய நடுவர் மன்றம் அமைப்பதே சிறந்தது.”
இவ்வாறு அவர் கூறினார்.