சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 12-ம் தேதி பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தண்டையார்பேட்டை மண்டலம், கொருக்குப்பேட்டையில் இரயில்வே 2பி சந்திக்கடவில் ரூபாய் 96.04 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தினை திறந்து வைக்க உள்ளார். இதனை முன்னிட்டு, முன்னேற்பாடுப் பணிகள் குறித்து இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தண்டையார்பேட்டை மண்டலம், கொருக்குப்பேட்டையில் இரயில்வே 2ஏ சந்திக்கடவில் ரூபாய் 75 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்படவுள்ள பாலத்திற்கு அடிக்கல் நாட்டுவதை முன்னிட்டு, முன்னேற்பாடுப் பணிகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளின்போது மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.ஜே எபினேசர் (ஆர்.கே நகர்), ஆர்.டி.சேகர் (பெரம்பூர்), மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன், வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மண்டலக் குழுத் தலைவர் நேதாஜி யு. கணேசன், மண்டல அலுவலர் ராஜ்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.