தமிழக செய்திகள்

பார்சல் சேவையில் புதிய மாற்றங்கள்; கூடுதல் பாதுகாப்பு: பொதுமக்களுக்கு அஞ்சல் துறை அழைப்பு

வாடிக்கையாளர்களின் வசதிக்காக தலைமை அஞ்சலகங்களில் பிரத்யேக பார்சல் பேக்கிங் மையங்கள் செயல்படுகின்றன என்று தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி,

இந்திய அஞ்சல் துறை தனது பார்சல் சேவைகளை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்படுத்தி வழங்குகிறது. இந்த சேவைகளை பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில், பார்சல் சேவையில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக பார்சல்களைப் பெறுபவரின் வீட்டு வாசலுக்கே கொண்டு வந்து சேர்த்தல். ரகசிய குறியீடு (OTP) அடிப்படையிலான விநியோக முறை.

வணிக நோக்கில் பார்சல்கள் அனுப்புவோருக்கு தபால் நிலையத்திலிருந்து வந்து பெற்றுக்கொள்ளும் (Pickup) வசதி. இந்தியா முழுவதும் பார்சல்களை அனுப்ப ஒரே மாதிரியான கட்டண முறை பின்பற்றப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட பார்சல்களை இணையதளம் மூலம் எங்குள்ளது (Tracking) என்பதை எளிதாகக் கண்டறியலாம். இந்தியாவிற்குள் மட்டுமன்றி, வெளிநாடுகளுக்கும் பார்சல்களை அனுப்பும் வசதி உள்ளது.

வாடிக்கையாளர்களின் வசதிக்காக தலைமை அஞ்சலகங்களில் பிரத்யேக பார்சல் பேக்கிங் மையங்கள் செயல்படுகின்றன. அனைத்து கிளை அஞ்சலகங்களிலும் இந்த சேவை கிடைக்கிறது. இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு 9841875710 மற்றும் 9791655030 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.