தமிழக செய்திகள்

தீட்சிதர்களின் அதிகாரம் பறிப்பு; சிதம்பரம் கோவில் நிர்வாகத்தை கண்காணிக்க புதிய குழு

சிதம்பரம் கோவில் நிர்வாகத்தை கண்காணிக்க குழு நியமித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சிதம்பரம் கோவில் நிர்வாகத்தை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் இருவர் தலைமையில் நிர்வாகக் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தலைவராக வி.பாரதிதாசன், துணைத்தலைவராக ஆர்.சுரேஷ்குமார் ஆகியோரை நியமித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கனகசபை மீது ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, பொது தீட்சிதர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். அதேநேரத்தில், அரசின் உத்தரவுக்கு ஆதரவாகவும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், இ. மனோகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது கடந்த 2014-ம் ஆண்டு கோவில் நிர்வாகம் தீட்சிதர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, அதன் நிர்வாகம் முறையாக நடைபெறவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து கோவில் நிர்வாகத்தை கண்காணிக்க ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டனர்.

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி வி. பாரதிதாசன் குழுவின் தலைவராகவும், ஓய்வுபெற்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன் உறுப்பினராக இருப்பார். பொது தீட்சிதர்கள் சங்கத்தின் செயலாளர், இந்து சமய அறநிலையத் துறை செயலாளர் ஆகியோர் அலுவல் சாரா உறுப்பினர்களாக செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் பொது தீட்சிதர்கள் மேற்கொண்ட தொடர் கட்டுமானத்தால் புராதன கட்டிடங்களுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளன. அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள தேவையற்ற கட்டிடங்களை அப்புறப்படுத்த தமிழ்நாடு புராதனச் சின்ன ஆணையத்துடன் கலந்தாலோசித்து புதிய நிர்வாகக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிதம்பரம் கோயிலின் கனகசபையில் நின்று பக்தர்கள் அனைவரும் தரிசிக்கவும், தேவாரம், திருவாசகம் பாடவும் சம வாய்ப்பு அளிப்பதை நிர்வாகக் குழு உறுதி செய்ய வேண்டும். புதிய நிர்வாகக் குழுவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், அரசுத் துறை அதிகாரிகள் வழங்க வேண்டும்.

என உத்தரவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT