தமிழக செய்திகள்

தமிழக அரசியலில் புதிய ஆற்றல் - அண்ணாமலை

அண்ணாமலையின் இயக்கத்தில் இணைவோர் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியது.

சென்னை,

தமிழக பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமாவை பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின் ஏற்றதாக பொதுச்செயலாளர் அர்ஜூன் சிங் அறிவித்தார். மேலும் பாஜக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகும் அண்ணாமலையின் முடிவும் ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை சமூக வலைதளம் மூலம் நேரலையில் பேசினார். அப்போது அவர் புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கப் போவதாக அறிவித்தார். மேலும் அவர் தனது கட்சி அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிடும் என அறிவித்தார்.

அண்ணாமலை நேற்று முன் தினம் அரசியலை கட்சியை தொடங்கியது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு தனது இயக்கத்தில் சேர்வதற்கான இணையதள முகவரியையும் தெரிவித்தார். அதில் உடனடியாக பலரும் சேர தொடங்கினார்கள்.

இந்த நிலையில், தற்போது வரை (ஞாயிறு - காலை 9.30 மணி) ஆன்லைன் மூலம் அண்ணாமலையின் We The Leaders' என்ற புதிய அரசியல் இயக்கத்தில் இணைவோர் எண்ணிக்கை 15 லட்சத்தை (15,43,250) தாண்டியது. நிமிடத்திற்கு 200, 300 என அடுத்தடுத்து உறுப்பினர்கள் சேர்க்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. www.wetheleader.org இணையதளத்தில் தங்கள் பெயர், மொபைல் எண்ணை பதிவு செய்து பலர் உறுப்பினர்களாக இணைந்து வருகின்றனர்.

இந்தநிலையில்,பாஜகவில் இருந்து விலகி புதிய இயக்கம் தொடங்கிய நிலையில் அண்ணாமலை எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

தமிழக அரசியலில் அசுர பலத்துடன் புதிய ஆற்றல் உருவாகி கொண்டிருக்கிறது. கட்சி வளர்ச்சிக்காக 1963 அக்டோபரில் அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜர் பதவி விலகினார். மாற்றம் என்பது அரசியல் மேடையில் அல்ல, மக்களை சந்திப்பதில் தொடங்குவதாக கூறினார் காமராஜர். மெரினாவில் உருவான ஆற்றல் ஜல்லிக்கட்டு போராட்டத்தோடு மடிந்துவிடவில்லை என அதில் கூறியுள்ளார்.