தமிழக செய்திகள்

விவசாயிகளுக்கு புதிய வசதி: கூட்டுறவு சங்கங்களில் விதைகள், உரங்கள் ரொக்கத்துக்கு விற்பனை

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைக்கு (எம்.ஆர்.பி.) மிகாமல் ரொக்கப்பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக விவசாயிகள் பயனடையும் வகையில், பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள் மற்றும் ரசாயன உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்களை ரொக்கத்துக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கூட்டுறவு சங்கம்

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர் சாகுபடிக்கு தேவையான நிதியானது குறுகிய காலக்கடனாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இக்கடனின் ஒரு பகுதியாக விதைகள் மற்றும் ரசாயன உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்களும் வழங்கி வினியோகிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது வரை கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக இல்லாத விவசாயிகளும், உடனடியாக உறுப்பினராக இணைந்து குறைந்த வட்டியில் வழங்கப்படும் பயிர்க்கடனை பெற்று பயனடையலாம்.

ரொக்கப்பணம்

இதன் மூலம் விதைகள் மற்றும் ரசாயன உரங்களையும் அவர்கள் பெற முடியும். இந்தநிலையில், விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில், விதைகள் மற்றும் ரசாயன உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்களை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைக்கு (எம்.ஆர்.பி.) மிகாமல் ரொக்கப்பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT