சென்னை,
தமிழ்நாடு அரசு நிதித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு நிலையான ஓய்வூதிய பலன்களை வழங்கும் நோக்கில் 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்திட்டம்' (டேப்ஸ்) கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும், அதற்கான விரிவான விதிமுறைகள், செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகள் இன்னும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இதனால் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்திட்டம் விதிகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வரும் வரை இடைக்கால ஏற்பாடாக மாதாந்திர வாழ்வாதாரத்தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி அல்லது அதற்குப்பிறகு முறையான பணியில் சேர்ந்து, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் (சி.பி.எஸ்.) இடம் பெற்றுள்ள அரசு ஊழியர்கள், கடந்த ஜனவரி 1-ந் தேதி அல்லது அதற்குப்பிறகு குறைந்தது 10 ஆண்டுகள் பணிபுரிந்து வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெறுபவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவர்.
அவர்களுக்கு கடைசியாக பெற்ற அடிப்படை ஊதியத்தின் 30 சதவீதம் அல்லது ரூ.10 ஆயிரம் இதில் எது அதிகமோ அந்தத்தொகையுடன் அகவிலைப்படி நிவாரணத்தின் 50 சதவீதம் சேர்த்து மாதந்தோறும் இடைக்காலத் தொகை வழங்கப்படும்.
அதேபோல கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதிக்கு பிறகு பணியில் இருக்கும்போது மரணமடையும் அரசு ஊழியர்களின் தகுதியான குடும்ப உறுப்பினர்களுக்கும் இடைக்கால குடும்பத்தொகை வழங்கப்படும். இறந்த ஊழியரின் கடைசி அடிப்படை ஊதியத்தின் 30 சதவீதம் அல்லது ரூ.10 ஆயிரம் இதில் எது அதிகமோ அந்தத்தொகையுடன் 50 சதவீத அகவிலைப்படி நிவாரணம் சேர்த்து வழங்கப்படும்.
இடைக்காலத்தொகை பெற்று வந்த ஓய்வூதியர் பின்னர் மரணமடைந்தால், அவருக்கு வழங்கப்பட்ட இடைக்கால மாதாந்திரத் தொகையின் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். இந்த இடைக்காலத் தொகையைப் பெற விரும்பும் ஓய்வூதியர்கள் மற்றும் தகுதியான குடும்ப உறுப்பினர்கள், அரசாணை வெளியிடப்பட்ட நாளில் இருந்து 60 நாட்களுக்குள் உரிய உறுதிமொழி படிவத்தில் விருப்பம் தெரிவிக்க வேண்டும்.
இடைக்காலத்தொகை ஓய்வு பெற்ற அல்லது மரணமடைந்த தேதிக்கு அடுத்த நாளில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.