சென்னை,
நந்தனத்தில் புதிய தலைமை செயலகம் அமைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை மற்றும் தலைமைச் செயலகம் தற்போது செயல்பட்டு வரும் புனித ஜார்ஜ் கோட்டையில் இடநெருக்கடி அதிகரித்து வருவதால், புதிய வளாகம் அமைக்க த.வெ.க அரசு திட்டமிட்டது.
இதற்காக பட்டினப்பாக்கத்தில் உள்ள வீட்டுவசதி வாரிய நிலத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க முடிவு செய்து, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால், அந்தப் பகுதியில் கட்டிடம் அமைப்பதற்கு மீனவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, சென்னை அண்ணா சாலையில் உள்ள பல்லவன் இல்ல வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டது. கூவம் ஆற்றுக்கு அருகில் அந்த வளாகம் அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், புதிய தலைமைச் செயலகத்துக்கான இடத்தை இறுதி செய்வதில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.
இந்த நிலையில், தொழில்முறை நகரமைப்பு வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம்.சதானந்த், முதல்-அமைச்சர் விஜய் மற்றும் மூத்த அமைச்சர்களுக்கு விரிவான அறிக்கையுடன் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.
அதில், நந்தனத்தில் அரசினர் பண்ணைக்கு அருகில் உள்ள 80 ஏக்கர் அரசு நிலம் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு ஏற்றதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலம் தற்போது காஸ்மோபாலிட்டன் கிளப் மற்றும் கோல்ப் விளையாட்டு மைதானத்தின் பயன்பாட்டில் உள்ளது. கடந்த 1936-ம் ஆண்டு கோல்ப் மைதானத்துக்காக குத்தகைக்கு விடப்பட்ட இந்த நிலத்தின் குத்தகைக்காலம் முடிவடைந்துவிட்டது. இது தொடர்பான வழக்குகளில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளபோதிலும், குத்தகையைப் புதுப்பிப்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
எனவே, கிண்டி குதிரைப்பந்தய மைதான நிலத்தை அரசு மீட்டதைப் போல, நந்தனத்தில் உள்ள நிலத்தையும் மீட்டு புதிய தலைமைச் செயலகம் அமைக்கப் பயன்படுத்தலாம் என்று நகரமைப்பு வல்லுனர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
நந்தனம் நிலத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைத்தால், அண்ணா சாலையில் இருந்து வளாகத்துக்குள் செல்ல 2 அல்லது 3 நுழைவுவாயில்களை அமைக்க முடியும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வளாகத்தின் பின்புறத்தில் அடையாற்றின் குறுக்கே பாலம் அமைத்தால், கோட்டூர்புரத்துடன் இணைப்பை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய தலைமைச் செயலகத்துக்கான இடத்தை தமிழக அரசு இன்னும் இறுதி செய்யாத நிலையில், ஏற்கனவே திட்டமிட்டபடி பட்டினப்பாக்கத்தில் அமையுமா அல்லது நந்தனம் நிலத்தைப் பயன்படுத்துவது குறித்த இந்தப் பரிந்துரையை அரசு ஏற்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.