தமிழக செய்திகள்

கன்னியாகுமரிக்கு ‘பெருந்தலைவர் காமராஜர்’ பெயரில் புதிய சொகுசு படகு வருகை

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகள் வசதிக்காக 'பெருந்தலைவர் காமராஜர்' என்ற பெயரில் புதிய சொகுசு படகு வந்தடைந்தது.

படகு போக்குவரத்து

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் கடலில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்வையிட பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

அதன்படி பொதிகை, குகன், விவேகானந்தா, தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய 5 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த படகுகளில் பயணம் செய்ய சாதாரண கட்டணம் ரூ.100, மாணவர்களுக்கான கட்டணம் ரூ.40. சிறப்பு கட்டணம் ரூ.300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சொகுசு படகு வருகை

இந்தநிலையில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் புதிதாக அதிநவீன வசதிகள் கொண்ட 3 சொகுசு படகுகள் வாங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழ்நாடு கடல்சார் வாரிய நிதியில் கோவாவில் கட்டப்பட்டு வந்த 'பெருந்தலைவர் காமராஜர்' சொகுசு படகு காலையில் கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறைக்கு கொண்டு வரப்பட்டது.

150 பயணிகள்

இந்த சொகுசு படகு 133 டன் எடையும், 21 மீட்டர் நீளமும், 7 மீட்டர் அகலமும் உடையது. இதில் ஒரே நேரத்தில் 150 பயணிகளும், 7 முக்கிய பிரமுகர்களும் பயணம் செல்லும் வசதி உள்ளது. மேலும் அவசர காலத்தில் திறக்கும் வகையில் 4 கதவுகள், கண்காணிப்பு கேமரா, இரவில் செல்லும் வகையில் மின்விளக்கு வசதி போன்றவை இடம்பெற்றுள்ளன.

இந்த படகு தற்போது பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு தளத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த படகு எப்போது சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்படும் என் பது பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட 3 படகுகளில் ஒரு படகு வந்துள்ள நிலையில் மற்ற இரு சொகுசு படகுகளும் இந்த மாத இறுதியில் கன்னி யாகுமரிக்கு வர உள்ளதாக தெரிகிறது.

SCROLL FOR NEXT