தமிழக செய்திகள்

சிறுநீரக நோயை முன்கூட்டியே கண்டறிய புதிய மருத்துவ வாகனம்: சென்னை மாநகராட்சி புதிய முயற்சி

மாநகராட்சி ஆணையாளர் ஹூண்டாய் மொபிஸ் சார்பில் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்ட 10 டயாலிசிஸ் இயந்திரங்களைப் பயன்பாட்டிற்கு வழங்கினார்.

சென்னை,

சென்னையில் சிறுநீரக நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வகையில், நவீன பரிசோதனை வசதிகளுடன் கூடிய புதிய நடமாடும் மருத்துவ வாகனத்தை மாநகராட்சி ஆணையாளர் சமீரன், இன்று பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்.

மருத்துவ வாகனம்

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சி, வள்ளுவர் கோட்டம் அருகில் கோடம்பாக்கம் பிரதான சாலையில் உள்ள மாநகராட்சி நோய் கண்டறியும் மையத்தில் செயல்படும் RCME டேங்கர் டயாலிசிஸ் மையத்தில் தமிழ்நாடு கிட்னி ரிசர்ச் பவுண்டேஷன் (Tamilnadu Kidney Research Foundation) சார்பில் மொபிஸ் இந்தியா (Mobis India) மற்றும் டேங்கர் அறக்கட்டளையின் (Tanker Foundation) பெருநிறுவன சமூகப் பங்களிப்பு நிதியில் வழங்கப்பட்ட சிறுநீரக நோயை முன்கூட்டியே கண்டறியும் டயாலிசிஸ் உபகரணங்களுடன் கூடிய வாகனத்தை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், இன்று பார்வையிட்டு பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்.

சிறுநீரக நோய்

இந்த வாகனத்தில் அமரும் பகுதி, வாகனத்தின் பின்பகுதியில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள படுக்கை வசதி, இரத்த சர்க்கரை பரிசோதனை கருவி, இரத்த கிரியேட்டினின் அளவை துல்லியமாக 1 நிமிடத்திற்குள் சரிபார்க்கும் பட்டை (Strip) ஆகியவை உள்ளன. இதன் மூலம் பாதிக்கப்பட்ட நபருக்கு ஆரம்ப நிலையிலேயே சிறுநீரக நோய் உள்ளதா என பரிசோதிக்க முடியும். இரத்தப் பரிசோதனை முடிவில் ஏதேனும் அசாதாரணமாக இருந்தால் தனிப்பட்ட முறையில் அவர்கள் சிறுநீரக ஸ்கேன் செய்து கொள்ளலாம். சிறுநீரகப் புரதம் மற்றும் இரத்தக் கசிவுக்கான சிறுநீர் பரிசோதனை, டிஜிட்டல் முறையில் இரத்த அழுத்தப் பரிசோதனை மற்றும் உடல் நிறை குறியீட்டெண் (BMI) அளவீடு ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. இவை சிகிச்சை மேற்கொள்ளும் நிபுணர்களால் கண்காணிக்கப்படும்.

பரிசோதனை

பின்னர், மாநகராட்சி ஆணையாளர் ஹூண்டாய் மொபிஸ் சார்பில் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்ட 10 டயாலிசிஸ் இயந்திரங்களைப் பயன்பாட்டிற்கு வழங்கினார். இதனைத் தொடர்ந்து, இந்த மையத்தில் மேற்கொள்ளப்படும் டயாலிசிஸ் மருத்துவ நடவடிக்கைகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஹூண்டாய் மொபிஸ் நிறுவனமானது சிறுநீரக நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பரிசோதனை முகாம்களை 18 மாதங்களுக்கு நடத்துவதற்கு உரிய பங்களிப்பை வழங்கியுள்ளது.

இந்நிகழ்ச்சியில், துணை ஆணையாளர் (சுகாதாரம்) தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மாநகர நல அலுவலர் ஜெகதீசன், மொபிஸ் இந்தியா பவுண்டேஷன் தலைவர் ஜி.நரசிம்மன், டேங்கர் பவுண்டேஷன் தலைவர் ஜார்ஜி ஆபிரகாம், நிர்வாக அறங்காவலர் லதா குமாரசுவாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT