சென்னை,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 'இ.ஓ.எஸ். 5' என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை, 'ஜி.எஸ்.எல்.வி. எப்-17' ராக்கெட்டில் பொருத்தி விண்ணுக்கு அனுப்பும் பணிகளை மேற்கொண்டது. இந்த நிலையில், ராக்கெட்டுக்கான கவுண்ட்டவுன் முடிந்ததையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.55 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
18 நிமிடங்களுக்குப் பிறகு 'இ.ஓ.எஸ்.-5' செயற்கைக்கோள் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வானதி சீனிவாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
இன்று சூரிய உதயத்திற்கு முன்பாக, இஸ்ரோவால் ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இ.ஓ.எஸ்.-5 வெற்றிகரமாக ஏவப்பட்டது நாட்டின் விண்வெளிப் பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாகும். இந்த சாதனை நமது தேசத்தின் பாதுகாப்பையும், கண்காணிப்புக்கான நமது திறன்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இந்த வரலாற்றுச் சாதனையை புரிந்த அர்ப்பணிப்பு மிக்க இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி பாரதத்திற்கான தொலைநோக்குப் பார்வையால் விண்வெளித்துறையில் தேசத்தின் புதிய முயற்சிகள், நாட்டின் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றம், தொழில்நுட்பத் தலைமைத்துவத்தை மேலும் வலுப்படுத்தி உயரத்திற்கு அழைத்துச் செல்லட்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.