விழுப்புரம்,
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் உள்ளது. இருவரும் தனித்தனி அணியாக உள்ளனர். வரும் சட்டசபை தேர்தலில் அன்புமணி அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் ஐக்கியமாகி உள்ளது. அன்புமணியின் பா.ம.க.விற்கு 18 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. .
முன்னதாக கட்சி சின்னம், பெயர் உள்ளிட்டவை அன்புமணிக்குதான் சொந்தம் என தேர்தல் ஆணையம் அறிவித்ததை எதிர்த்து கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் டாக்டர் ராமதாசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பெரும் ஏமாற்றம் அடைந்தார். இதனிடையே டாக்டர் ராமதாஸ், சசிகலா புதிதாக தொடங்கிய அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்து வருகிற சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளார்.
இது பா.ம.க.வினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வருகிற சட்டமன்ற தேர்தலில் அன்புமணி ராமதாசுக்குதான் பா.ம.க.வின் பெயரை பயன்படுத்தவும், மாம்பழம் சின்னத்தை ஒதுக்கவும் அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள டாக்டர் ராமதாஸ் தற்போது புதிய கட்சியை தொடங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.வின் தலைமை நிலைய செயலாளரான அன்பழகன் என்பவரின் மகன் முகிலன் தேர்தல் ஆணையத்தில் ‘அய்யா பாசறை மக்கள் கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்க விண்ணப்பம் அளித்துள்ளார். இந்த கட்சி பெயரின் சுருக்கம் அய்யா பா.ம.க. ஆகும். புதிய கட்சி தொடங்க உள்ளது குறித்து திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று (வியாழக்கிழமை) அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என கூறப்படுகிறது.