தமிழக செய்திகள்

எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் : பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நாளை புதிய கட்சி உதயம்

ஓபிஎஸ் எவ்வித அரசியல் முடிவையும் எடுக்க வேண்டிய நேரத்தில் எடுக்காமல் மௌனமாக இருப்பது தொண்டர்களிடையே கடுமையான குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை,

எந்தவித முடிவும் எடுக்காமல் ஓபிஎஸ் காலம் தாழ்த்துவதால் வரும் பிப்.19 ஆம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் சென்னையில் புதிய கட்சி உதயமாவதாகவும் இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்ட ஆதரவாளர்கள் அனைவரும் ஒபிஎஸ் அணியிலிருந்து ஒட்டு மொத்தமாக விலகுவதாகவும் மாவட்ட செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் செயல்பட்டு வந்தது. ஓபிஎஸ் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. இந்த நிலையில் அவரது கழகத்தின் மாவட்ட செயலாளரான முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் தனது ஆதரவாளர்களுடன் காஞ்சிபுரம் அருகேயுள்ள முத்தியால் பேட்டையில் ஆலோசனை நடத்தினார்.அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை அதிமுகவுடன் இணைக்க வேண்டும் என்று முயற்சித்தோம். பன்னீர் செல்வத்தை சேர்த்துக் கொள்ள முடியவே முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறி விட்டார்.பின்னர் உடனடியாக வேறு முடிவு எடுக்க வேண்டும் என்று கழக மாவட்ட செயலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தினோம். கழக மாவட்ட செயலாளர்கள் 88 பேரில் 77 பேர் த.வெ.க.வில் கூட்டணி அமைக்கலாம் என்று விருப்பம் தெரிவித்தும் அதற்கும் அவர் முடிவு எடுக்கவில்லை.

தலைமை எந்த வித அரசியல் முடிவையும் எடுக்க வேண்டிய நேரத்தில் எடுக்காமல் மௌனமாக இருப்பது தொண்டர்களிடையே கடுமையான குழுப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் ஒட்டு மொத்தமாக ஒபிஎஸ் அவர்களுக்கு கொடுத்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்ள முடிவு செய்தோம்.

இது தொடர்பான எனது ராஜினாமா கடிதத்தை ஓபிஎஸ் இல்லத்துக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்படும். ஓபிஎஸ் மீது தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த கோபமும் இல்லை. காஞ்சிபுரத்தில் எனது தலைமையில் பலமான கட்டமைப்பு உள்ளது என்பதை விரிவாக அவரிடம் விளக்கி கூறி விட்டுத்தான் வந்துள்ளோம்.

வரும் பிப்.19 ஆம் தேதி சென்னையில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் புதிய கட்சி உதயமாகிறது.அதில் உரிமை மீட்புக் கழக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் இணைய முடிவு செய்துள்ளோம் என்றும் ஆர்.வி.ரஞ்சித் குமார் தெரிவித்தார்.

பேட்டியின் போது கழக பொருளாளர் வஜ்ரவேல்,உத்தரமேரூர் பகுதி செயலாளர் ஜெ.காமாட்சி கான் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் உடன் இருந்தனர்.