சென்னை,
ஒரே டாஸ்மாக் கடையில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. கடை பராமரிப்பு செலவு உள்ளிட்டவற்றை காரணம் காட்டி ஊழியர்கள் கூடுதல் பணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கடை பராமரிப்பு மற்றும் தூய்மை பணிக்கான செலவுகளை நிர்வாகமே ஏற்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் தூய்மை பணிக்காக மாதம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
மேலும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சீருடைக்காக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இதனால், கடை பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளுக்காக வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் பணம் வசூலிக்கும் ஊழியர்கள் மீது பாரபட்சமின்றி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அதிக வசூல் நடைபெறும் கடைகளில் பணிபுரிய ஊழியர்களிடையே ஆர்வம் குறைந்துள்ளது. மேலும், பலர் சொந்த ஊரில் பணிபுரிய விரும்புகின்றனர்.
இதையடுத்து, ஒரே டாஸ்மாக் கடையில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு டாஸ்மாக் நிறுவன இயக்குனர்கள் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.